வானிலை ஆய்வு மையம் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக சென்னையில் இன்னும் 2 நாட்களுக்கு மிதமான மழை இருக்கக்கூடும் என அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநரான புவியரசன் செய்தியாளர்களிடம், “குமரிக்கடல் ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிகழ்வதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய கடலோர மாவட்டங்களில் கனத்த மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது.
அடுத்த 3 நாட்களுக்கு அனைத்து பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். இன்றும் நாளையும் தமிழ்நாட்டில் மிக பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ‘ஆரஞ்சு ‘ எச்சரிக்கை விடுத்து இருக்கின்றது.
தமிழகத்தை பொறுத்தவரை 20,21,22 தேதிகளில் மிக பலத்த மழை பெய்யும் என்று ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் 2 நாட்களுக்கு மழை மிதமாக இருக்கும்.
அதிகபட்சமாக 24 மணிநேரத்தில் புவனகிரியில் 9 செ.மீ மழையும், நாகர்கோவிலில் 8 செ.மீ. மழையும் பெய்துள்ளது. குமரிக்கடல் மன்னார் வளைகுடா பகுதியில் சில நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.