பிரதேச தனிமைப்படுத்தல், பயணக் கட்டுப்பாடுகள் மக்களது பாதுகாப்பிற்கும் எதிர்கால நன்மைக்காகவுமே!
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முக்கிய நடவடிக்கையாக எதிர்வரும் மே 30 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானித்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடு நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் நிலையில் வைரஸ் தொற்று நோயாளர்கள் பெருமளவில் காணப்படும் பகுதிகளை தனிமைப் படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அதேவேளை, கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் அரசாங்கத்தின் மேற்படி வேலைத்திட்டங்களுக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ள ஜனாதிபதி, மக்கள் பொறுப்புடன் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்னாயக்க மேலும் தெரிவிக்கையில்; 500,000 அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகள் இலங்கைக்கு இலவசமாக கிடைக்கப் பெற்றதுடன், மேலும் 500,000 தடுப்பூசிகளை அரசாங்கம் கொள்வனவு செய்தது.
மேலும் 265,000 தடுப்பூசிகள் எமக்குக் கிடைக்கப் பெற்றன. அதன்படி, இலங்கைக்கு 12 லட்சத்து 65,000 அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றன.
முதல் தடுப்பூசி ஏற்றலின் போது, 9,25,000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. இந்தியாவில் அண்மையில் ஏற்பட்ட நிலைமை காரணமாக, இரண்டாம் கட்ட தடுப்பூசிகளைப் பெறுவதில் நெருக்கடி ஏற்பட்டது.இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளுக்கு சுமார் 600,000 அஸ்ட்ரா செனகா தடுப்பூசி தேவை என்று சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.அதனைப் பெறுவதற்காக அரசாங்கம் தற்போது பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி வருகிறது.
இதற்கிடையில், இலங்கைக்கு சீனாவிடமிருந்து 600,000 சைனோபார்ம் தடுப்பூசிகள் நன்கொடையாக கிடைக்கப்பெற்றன. இதனைப் பயன்படுத்த உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஒப்புதல் கிடைத்திருக்கவில்லை.எவ்வாறாயினும், கடந்த வெள்ளிக்கிழமை சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக உலக சுகாதார ஸ்தாபனத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடத்திய கலந்துரையாடலின் விளைவாக, அன்று மாலையிலேயே உலக சுகாதார ஸ்தாபனம் “சைனோபார்ம்” தடுப்பூசிகளை அவசர பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்தது.
அதன்படி மறுநாள் ‘சைனோபார்ம்’ தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 25,000 வீதம் முதலில் மேல் மாகாணத்தில் தடுப்பூசிகளை ஏற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
சீனாவிடமிருந்து 03 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகளைப் பெறுவதற்காக சீன அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளன. அத்தடுப்பூசிகள் கிடைத்தவுடன் ஏனைய மாகாணங்களிலும் தடுப்பூசி ஏற்றும் பணிகளை ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியையும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. முதல் கட்டத்தில், இலங்கைக்கு 15,000 தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. ஸ்புட்னிக் தடுப்பூசி முறையானது பயன்படுத்தப்படும் ஏனைய தடுப்பூசிகளிலிருந்து சற்று வித்தியாசமாக இருப்பதால், எமது சுகாதாரத் துறை புதிய முறைமைகளை பின்பற்றி கொத்தட்டுவ பகுதியில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை ஆரம்பித்தது. இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ், 85,000 தடுப்பூசிகள் விரைவில் கிடைக்கவுள்ளன.
அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் இந்த தடுப்பூசியின் மூலம் வெற்றிகரமான பெறுபேறுகளை பெற்றுக்கொண்டுள்ளதைப் போன்று எங்களுக்கும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மூலம் தற்போதைய நிலைமையை வெற்றிகரமாக கட்டுப்படுத்த முடியும் என்பதுடன், இலங்கையின் வலுவான சுகாதார அமைப்பு மற்றும் ஒட்டுமொத்த சுகாதார பணிக்குழாமினர் தொடர்பில் ஜனாதிபதி பூரண நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.
உலக சுகாதார தாபனம் ஜனாதிபதி அவர்களுடன் கலந்துரையாடிய அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கையின் வலுவான சுகாதார சேவை முறையை பாராட்டியுள்ளது.
இருப்பினும், இந்த எல்லா சூழ்நிலைகளுடனும், கோவிட் 19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மக்களின் அர்ப்பணிப்பும் மிக முக்கியமானது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டுகிறார். அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் இணங்க சுகாதாரத் துறை வழங்கியுள்ள ஆலோசனைகளை பின்பற்றி சமூக இடைவெளியை பேணுதல், மற்றும் தேவையற்ற கூட்டங்களைத் தவிர்ப்பது போன்ற சமூகப் பொறுப்புகளில் அனைத்து பிரஜைகளும் கவனம் செலுத்துவது ஒரு ஆரோக்கியமான தேசத்திற்கு வழிவகுக்கும் என்றும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார் என ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.