ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாணவர்களை தடியடி நடத்தி கலைத்ததற்கு கண்டனம் தெரிவித்து மெரினாவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தையும் கட்டுப்படுத்த போலீசார் வீடு வீடாக சென்று இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பாதியளவை போலீசார் தடியடி நடத்தி துரத்திவிட்டனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், மெரினா நோக்கி வரும் சாலைகள் அனைத்தும் மாணவர்கள், இளைஞர்கள் வந்து விடக் கூடாது என்பதற்காக அடைக்கப்பட்டன. மீண்டும் கடற்கரை நோக்கி வந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கல்வீச்சு தாக்குதல் நடைபெற்றது. இதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும், அங்கு தீ வைப்பு வன்முறை சம்பவங்களும் நடைபெற்று ஒரு போர் களம் போன்று திருவல்லிக்கேணி பகுதி காட்சியளிக்கிறது.
இந்நிலையில், திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று போலீசார் இளைஞர்களை கைது செய்து வருகின்றனர். இதன் மூலம் வன்முறையையும் போராட்டத்தையும் கட்டுக்குள் கொண்டு வர போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். அதே வேளையில் போராட்டத்தில் ஈடுபடாத வீட்டிற்குள் இருந்த இளைஞர்களையும் போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இங்கு நடைபெற்ற வன்முறையில் படுகாயம் அடைந்த பலரையும் ஆம்புலன்ஸ் வாகனங்களின் மூலம் கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.