தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோல்வி கண்ட இளம் வீரர்களை கொண்ட டெல்லிடேர்டெவில்ஸ் அணி, முந்தைய ஆட்டத்தில் ஐதராபாத்தை வென்றதன் மூலம் தங்களின் தோல்விப்பயணத்துக்கு ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைத்தது. 9 ஆட்டங்களில் 3-ல் வெற்றி பெற்றுள்ள டெல்லி அணி, எஞ்சிய 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆப் சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும்.
ஒன்றில் தோற்றாலும் நடையை கட்ட வேண்டியது தான். எனவே இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் உள்ளது. ஐதராபாத்துக்கு எதிராக 186 ரன்களை ‘சேசிங்’ செய்ததும், உள்ளூரில் விளையாடுவதும் டெல்லி அணிக்கு நிச்சயம் கூடுதல் நம்பிக்கையை அளிக்கும்.
10 ஆட்டங்களில் 3 வெற்றி, 7 தோல்வியை சந்தித்து 6 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ள குஜராத் அணி ஏறக்குறைய அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது என்றே சொல்ல வேண்டும்.
மீதமுள்ள 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாலும், மற்ற ஆட்டங்களின் முடிவு சாதகமாக அமைந்து, ரன்ரேட்டில் நல்ல நிலையை எட்டி ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் குஜராத்துக்கு பிளே-ஆப் சுற்று அதிர்ஷ்டம் கிட்டலாம். மற்றபடி அந்த அணி இனி புள்ளி பட்டியலில் கவுரவமான நிலையை அடைய முயற்சிக்கும். பேட்டிங்கில் வலிமை மிகுந்த குஜராத் அணிக்கு பந்து வீச்சு சோடைபோனதால் இந்த ஐ.பி.எல்.-ல் தள்ளாட வேண்டியதாகி விட்டது.