தேர்வு பயத்தால் மன அழுத்தத்தில் இருக்கும் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் நடிகர் அக்ஷய் குமார் வீடியோ மூலம் ஆலோசனை தெரிவித்துள்ளார். அதில், அவர் கூறி இருப்பதாவது:-
நான் சிறுவனாக இருந்தபோது என்னுடைய தந்தை என் அருகே அமர்ந்து, பெரியவனானதும் என்னவாக ஆசைப்படுகிறாய்? என்று கேட்டார். அப்போது, எனக்கு விளையாட்டில் ஆர்வம் இருப்பதாக கூறினேன். தற்காப்பு கலைகளை கற்று தேர்ந்தேன். இதைத்தொடர்ந்து, விளையாட்டு, மாடலிங் மற்றும் நடிப்பு என காலங்கள் கடந்துவிட்டன.
என்னுடைய பெற்றோர் மட்டும் எனக்கு ஆதரவாக இல்லை என்றால், தேசிய விருதை வெல்வது நெடுந்தூர கனவாகவே போயிருக்கும். குழந்தைகளின் வாழ்க்கை மீது பெற்றோர் அதிக கவனம் செலுத்துங்கள். மன நோயை மற்ற வியாதியை போல் பாருங்கள்.
இளைஞர்கள் வாழ்க்கையை லேசாக எடுத்து கொள்ள கூடாது. அதன் மதிப்பை உணர வேண்டும். உங்கள் உணர்வுகளை சிதைத்துவிடாதீர்கள். அதனை உங்களுக்கு அன்பானவர்களிடமும், அருகில் இருப்பவர்களிடமும் பகிருங்கள். மன அழுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர தற்கொலை ஒருபோதும் தீர்வு ஆகாது.
இவ்வாறு அக்ஷய் குமார் தெரிவித்தார்.