இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 11ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மகுடம் சூடப் போகும் அணியை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.
லண்டன் லோட்ஸ் மைதானத்தில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ள இப் போட்டியில், இந்தியாவும் முன்னாள் சம்பியனான இங்கிலாந்தும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
மிதாலிராஜ் தலைமையில் களமிறங்கியுள்ள இந்திய அணி, லீக் சுற்றில் 5 வெற்றிகள், 2 தோல்விகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. தொடர்ந்து அரை இறுதியில் அவுஸ்ரேலியாவை வீழ்த்தி இரண்டாவது முறையாக இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்நிலையில், உலக் கோப்பை தொடரில் வரலாறு படைக்கும் முனைப்புடன் இந்திய வீராங்கனைகள் களமிறங்கியுள்ளனர். இப் போட்டியில் இந்திய அணி வெற்றிபெறுமாயின், உலகக் கோப்பையை வென்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையையும், உலகலாவிய ரீதியில் 4ஆவது அணி என்ற பெருமையையும் பெற்றுக்கொள்ளும்.
அத்தோடு, மூன்று முறை சம்பியனான இங்கிலாந்து அணி, ஆரம்ப லீக்கில் இந்தியாவிடம் 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதன் பிறகு வரிசையாக வெற்றிகளை குவித்த இங்கிலாந்து அணி, கம்பீரமாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்திருக்கின்றது. இந்நிலையில், இறுதிப் போட்டி இரு அணிகளுக்கும் சவால் மிக்க ஒன்றாக அமைந்துள்ளது.
இப் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு வெற்றிக்கிண்ணத்துடன், 4 ¼ கோடி இந்திய ரூபாய் பணப்பரிசு வழங்கப்படும். தோல்வியடையும் அணிக்கு ரூபாய் 2 கோடியே 12 இலட்சம் இந்திய ரூபாய் பணப்பரிசு வழங்கப்படும்.
இறுதிப் போட்டிக்கான வீராங்கனைகள் பட்டியல்.
இந்தியா: மிதாலி ராஜ் (தலைவர்), மந்தனா, பூனம் ரவுத், தீப்தி ஷர்மா, ஹர்மன்பிரீத் கவுர், வேதா கிருஷ்ணமூர்த்தி, சுஷ்மா வர்மா, ராஜேஷ்வரி கெய்க்வாட், கோஸ்வாமி, ஷிகா பாண்டே, பூனம் யாதவ் அல்லது எக்தா பிஷ்ட்.
இங்கிலாந்து: ஹீதர் நைட் (தலைவர்), வின்பீல்டு, டானி பியூமோன்ட், சாரா டெய்லர், நதாலி ஸிவர், பிரான் வில்சன், கேத்ரின் புருன்ட், ஜெனி குன், லாரா மார்ஷ், அன்யா சிரப்சோலே, அலெக்ஸ் ஹர்ட்லி.