யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டினை கண்டித்து வடமாகாணத்தில் நாளை பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
வட மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினால் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ். நல்லூர்ப் பகுதியில் வைத்து நேற்று மாலை நீதிபதி எம்.இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டிருந்தது. இந்தச் சம்பவத்தில் நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நீதிபதி மீதான துப்பாக்கிப் பிரயோகமானது மிலேச்சத்தனமான செயற்பாடாகும். நல்லாட்சி அரசாங்கத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதனை கண்டிக்கின்றோம்.
நீதித்துறைக்கே இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லையாயின் சாதாரண பொதுமக்களின் நிலை என்ன என்பதனை சிந்திக்க தலைப்பட்டுள்ளோம்.
நீதிபதி மீதான தாக்குதலானது இலங்கை நீதித்துறைக்கு விடுக்கப்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தலாகும் எனவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வடக்கில் உள்ள சமூகம் சார் அமைப்புகள், சமூக அக்கறைகொண்ட சங்கங்களையும் எம்முடன் இணைந்து அன்றைய தினத்தில் ஒத்துழைப்பு வழங்குமாறு கோருகின்றோம் எனவும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.