நல்லூரில் நேற்றுமாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று அல்ல என்று சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
“நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக, மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணைகளில், இது ஒரு எதிர்பாராத சம்பவம் என்றும், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதல் அல்ல என்றும் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் சகோதரர்களாவர். இவர்கள் பிரதான சந்தேக நபரின் உறவினர்களாவர்.
பிரதான சந்தேக நபரைக் கைது செய்வதற்கு பல காவல்துறைக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
வட மாகாண பிரதி காவல்துறை மா அதிபர் றொசான் பெர்னான்டோ, விசாரணைகளுக்குத் தலைமை தாங்கி வருகிறார்.” என்றும் சிறிலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.