யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனுடன் தொடர்பு கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,நேற்று இடம்பெற்ற சம்பவத்திற்கு கவலை வெளியிட்டுள்ளார்.
யாழ். நல்லூர் பின்வீதியில் நேற்றைய தினம் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த நீதிபதியின் மெய்ப்பாதுகாவலரின் சடலம் தற்பொழுது சிலாபத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது.
சடலம் மாங்குளம் பகுதியில் கொண்டு செல்லப்பட்ட நிலையில், நீதிபதி இளஞ்செழியனுக்கு தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நீதிபதிக்கு அதிகளவிலான பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன்,சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், யாழ். நல்லூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி் பிரயோகம் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட ஒன்றல்ல என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர மற்றும் யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஸ்னிரஸ்லஸ் ஆகியோர் கூறியிருந்தனர்.
ஆகவே நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முழுமையான விசாரணைகளை நடத்துமாறு உத்தரவிட்டுள்ள நிலையில்,பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர்களின் கருத்து முன்னுக்குப்பின் முரணாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.