நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்ய முயற்சித்தமைக்கு மல்வத்து பீடம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் மல்வத்து பீடத்தின் அனுநாயக்க திம்புல்கும்புரே ஸ்ரீ விமலதம்ம தேரர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே தேரர் கண்டனத்தை வெளியிட்டார்.
இலங்கையின் சட்டத்தை பாதுகாப்பதற்கு அனைத்து அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டத்திற்கு அழுத்தம் ஏற்படும் வகையில் செயற்பாடுகள் இடம்பெறாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஆட்சியாளர்களை கட்டுப்படுத்தும் பிரதான தரப்பாக அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்கள் காணப்படுகின்றன.
பௌத்தவாதத்தின் அடிப்படையில் அவர்களின் செயற்பாடு அமைந்திருப்பதுடன், சிங்களவர்கள் நலன் சார்ந்து மட்டும் அவர்களின் கருத்துக்களும் அமைந்திருக்கும்.
இந்நிலையில் முதன்முறையாக தமிழ் நீதிபதி ஒருவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தை கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் யாழ் நல்லூர் பகுதியில் யாழ் மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மர்மநபர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார். இந்த அனர்த்தத்தில் நீதிபதி உயிர் தப்பிய போதும், அவரின் மெய்பாதுகாவலர் உயிரிழந்துள்ளார்.