மகளிர் உலகக் கிண்ணத்தை சொந்த மண்ணில் வைத்து சுவீகரித்தது இங்கிலாந்து

இங்கிலாந்தில் நடைபெற்ற மகளிர் உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 9 ஓட்டங்களால் தோற்கடித்த இங்கிலாந்து அணி தனது சொந்த மண்ணில் வைத்து மகளிர் உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது.

CR

 

இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இந்த இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 228 ஓட்டங்களைப்பெற்றது.

இங்கிலாந்து அணி சார்பாக துடுப்பாட்டத்தில் சிவர் 51 ஓட்டங்களையும் டெய்லர் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக கோஸ்வமி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்நிலையில் 229 ஓட்டங்களைப்பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி இங்கிலாந்து அணியின் பந்துவீச்சுக்கும் களத்தடுப்பிற்கும் தாக்குப்பிடிக்க முடியாது சீரான இடைவெளியில் விக்கெட்டுகளைப் பறிகொடுக்க இறுதியில் 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த 9 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவிக்கொண்டது.

இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ரவூத் 81 ஓட்டங்களையும் கவூர் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இங்கிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் சருப்ஸொல் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தனது சொந்த மண்ணில் வைத்து 9 ஓட்டங்களால் தோற்கடித்த இங்கிலாந்து மகளிர் அணி 2017 ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது.