உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் இறுதிக்கிரியைகளுக்கான மொத்த செலவீனங்களையும் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அவர்களே பொறுப்பேற்றுள்ளதோடு அன்னாரது குடும்பத்தினர்க்கு உதவி செய்வதற்கும் நீதிபதியின் குடும்பத்தினர் முன்வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.
இந்த நெகிழ்ச்சி மிக்க செய்தி தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அவர்களின் மெய்ப்பாதுகாவலரான, சிலாபம் பகுதியைச் சேர்ந்த ஐம்பத்தொரு வயதுடைய ஹேமரத்ன என்ற பொலிஸ் உறுப்பினர் நேற்றைய தினம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானார். அன்னார் பதினைந்து வருடங்களுக்கும் மேலாக நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலராக இருந்ததோடு தனக்குரிய விடுமுறையைக்கூட எடுத்திராத நிலையில் தொடர்ந்தும் கடமை புரிந்துள்ளார்.
ஒரு மாதத்தில் முப்பது நாட்களும் ஓயாமல் தொடர்ச்சியாகப் பணியாற்றியிருந்ததாகவும் தனது சொந்த ஊரான சிலாபத்துக்கு பயணம் மேற்கொள்வதே அரிதான செயல் என்றும் நீதிபதியின் குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு நீதிபதி மேல் அளவுகடந்த மரியாதையும் அன்பும் வைத்து கடமையைச் சரிவர செய்திருந்த அன்னாரது இழப்பு தமது குடும்பத்துக்கு மிகுந்த சோகத்தினை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.