யாழ்ப்பாணத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நாளை செவ்வாய்க் கிழமை வடக்கு, கிழக்கில் கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்துமாறு வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
இக்குழு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையின் நீதிபதி ஒருவருக்கு ஏற்பட்டிருக்கும் இந்த அசாதாரண நிலைமை என்பது தற்காலத்தை அளவிடக் கூடிய ஒருஎடுகோளாகவே விளங்குகின்றது.
இச் சம்பவமானது நீதித்துறைக்கு மட்டு மன்றி நீதியை நிலைநாட்ட விழையும் மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சிவில் அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள் போன்றோருக்கும் விடுக்கப்பட்ட ஒரு அச்சுறுத்தலாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது.
மேல் நீதிமன்றநீதிபதி சட்டம் ஒழுங்கைநிலை நிறுத்தி நீதியை நிலை நாட்ட எடுத்துவரும் அண்மைக்கால முயற்சிகள் பாதிக்கப்பட்ட சமூகத்தின் மத்தியில் ஓர் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. இன்று அவர் கண்கலங்கி நிற்பதானது ஒட்டுமொத்த நீதித்துறையின் மீதுவிழுந்த பேரிடி என்றே கருதுகின்றோம். இத் தாக்குதல் சம்பவமானது நன்கு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தினையே காட்டி நிற்கின்றது.
இதன்மூலம் இலங்கையில் நீதியை நிலை நிறுத்தவும் மனிதஉரிமைகளை மேம்படுத்தவும் செயற்படும் செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் குறித்து இலங்கை அரசானது பல் கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ் அநீதிக்கெதிராக வீதியில் இறங்கி மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் அதேவேளை, மேற்படி தாக்குதல் சம்பவத்தினைக் கண்டித்து நாளை செவ்வாய்க் கிழமை காலை 9.30 மணிக்கு வடக்கு, கிழ க்கு மாகாணங்களிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் கண்டனப் பேரணியினை மேற்கொள்ளுமாறு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.
அண்மைக்காலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம் பெற்றுவரும் தொடர் அச்சுறுத்தல்கள், மனிதஉரிமைமீறல் சம்பவங்கள் குறித்து சர்வதேச சமூகத் தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முக மாக இக்கண்டனப் பேரணியில் மக்கள், மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், தொழிற்சங்கத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள், மதகுருமார்கள், நலன் விரும்பிகள் என அனைவரும் கலந்துகொண்டு எமது எதிர்ப்பினை ஒன்றிணைந்து வெளிப்படுத் துவோம்.
பேரணி தொடங்கும் இடங்கள்:-
1. அம்பாறை :- கல்முனை மனித உரிமை ஆணையகத்திற்கு அருகாமையில்.
2. மட்டக்களப்பு:- காந்திபூங்கா
3. திருகோணமலை:- கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு அருகாமையில்
4. மன்னார்:- கச்சேரிக்கு அருகாமையில்
5. வவுனியா:- கச்சேரிக்கு அருகாமையில்
6. கிளிநொச்சி:- டிப்போசந்தி, கிளிநொச்சி.
7.முல்லைத்தீவு:-கச்சேரிக்கு அருகாமை யில்
8.யாழ்ப்பாணம்-: கச்சேரிக்கு அருகாமை யில் என்று அவ் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.