யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான விசாரணை, ட்ரயல் அட் பார் தீர்ப்பாயத்தின் முன் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் தலைமையில் மூன்று நீதிபதிகள் கொண்ட தீர்ப்பாயத்தின் முன்னிலையில் காலை 9 மணிக்கு சாட்சி விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய தினம், ஊர்காவற்றுறை நீதவான் எம்.எம்.றியாழ் மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா ஆகியோரிடம் சாட்சி விசாரணைகள் நடைபெறும் என கடந்த அமர்வில் தெரிவிக்கப்பட்டது.
எனினும், ட்ரயல் அட் பார் தீர்ப்பாய நீதிபதிகளில் ஒருவரும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியுமாகிய மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதால் குறித்த சாட்சி விசாரணைகளை இன்று முன்னெடுப்பதா அல்லது பிற்போடுவதா என்பது குறித்து நீதிபதிகள் இன்று தீர்மானிப்பர்.
இதேவேளை, குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னணியில் மாணவி வித்தியாவின் கொலை தொடர்பான விசாரணை காரணமாக இருக்கலாம் என்றும் கருதப்படும் நிலையில், பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.