‘சயுரால’ போர்க்கப்பல் நாளை கொழும்பு நோக்கிப் புறப்படுகிறது

saurala

இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் சிறிலங்கா கடற்படைக்காக கட்டப்பட்ட ‘சயுரால’ என்று பெயரிடப்பட்டுள்ள ஆழ்கடல் ரோந்துக் கப்பல் நாளை கொழும்பு நோக்கிப் புறப்படவுள்ளது.

சிறிலங்கா கடற்படைக்காக கோவாவில் கட்டப்பட்டு வந்த  இரண்டு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களில் ஒன்று, நேற்று முன்தினம் சிறிலங்கா கடற்படையிடம் முறைப்படி கையளிக்கப்பட்டது.

இதனைப் பொறுப்பேற்பதற்காக, சிறிலங்கா கடற்படையின் தலைமை அதிகாரி றியர் அட்மிரல் ரணசிங்க தலைமையிலான அதிகாரிகள் குழுவொன்று கடந்த 21ஆம் நாள் இந்தியா வந்திருந்தது.

நேற்றுமுன்தினம் கோவா கப்பல் கட்டும் தளத்தில் நடந்த நிகழ்வில், சிறிலங்கா கடற்படைக்காக கட்டப்பட்ட ‘சயுரால’ (பி-623) என்ற கப்பல், சிறிலங்கா கடற்படை தலைமை அதிகாரியிடம் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் புதுடெல்லிக்கான சிறிலங்கா தூதுவர் சித்ராங்கனி வகீஸ்வராவும் கலந்து கொண்டார்.

இன்று இந்தக் கப்பல், முறைப்படி சிறிலங்கா கடற்படையினரிடம் கையளிக்கப்படும். நாளை கொழும்புத் துறைமுகம் நோக்கி இந்தக் கப்பல் புறப்படவுள்ளது.

அதேவேளை, வரும் ஓகஸ்ட் 02ஆம் நாள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த ஆழ்கடல் ரோந்துக் கப்பலை சிறிலங்கா கடற்படையில் அதிகாரபூர்வமாக இணைக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.