தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான பல சவால்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதாரம் 2016ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017ம் ஆண்டில் 3.8சதவீதத்தினால் வளர்ச்சியடைந்துள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
பணவீக்கம் அதாவது கடந்த மே மாத இறுதியில் 7.1சதவீதமாக குறைவடைந்திருப்பதாகவும் 2017ம் ஆண்டின் மத்தியபகுதியில் அரச நிதி நிலைமை தொடர்பான அறிக்கையில் இந்த நிலைமை குறிப்பிடப்பட்டுள்ளது.
2003ம் ஆண்டின் இலக்கம் 3ன் கீழான அரச நிதி முகாமைத்துவ சட்டத்திற்கு அமைவாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது .
2016ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சிவேகம் 5.1 சதவீதமாக பதிவாகியிருந்தது. இதற்கமைவாக இவ்வருடத்தில் முதல் காலாண்டு பகுதியில் 3.8 சதவீதம் வளர்ச்சி இடம்பெற்றிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டட நிர்மாணம் , அகழ்வு நடவடிக்கைகள் ,நிதி சேவை காப்புறுதி பணிகள் ,ஆடைத்தொழிற்துறை , கடற்தொழிற்துறை ஆகிய துறைகளில் ஏற்பட்ட அபிவிருத்தியே இதற்கு காரணமாகும்.
தேசிய நுகர்வோர் சுட்டெண்ணுக்கு அமைவாக 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிக்கைக்கு அமைய 8.4 சதவீதமாக இருந்த பணவீக்கம் மே மாதம் அளவில் 7.1 சதவீதமாக குறைவடைந்திருப்பதாகவும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை அரசாங்கத்தின் மொத்த வருமானம் 24.6 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.2016ம் ஆண்டில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் 4 இலட்சத்து 72 ஆயிரத்து 689 மில்லியன் ரூபாய்களாக இருந்தது.
2017ம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் இத்தொகை 5இலட்சத்து 89 ஆயிரத்து 17 மில்லியன் ரூபாய்களாக அதிகரித்துள்ளது.இந்த காலப்பகுதியில் அரசாங்கத்தின் வரி மற்றும் வரி அல்லாத வருமானம் அதிகரித்தமையே அரசாங்கத்தின் வருமானம் அதிகரிப்பதற்கு காரணமாகும் என்றும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.