நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் குடும்பத்தினருக்கு யாரும் எதிர்பாராத உதவியை நீதிபதி இளஞ்செழியன் செய்துள்ளார்.
தன்னுடன் 15 வருடங்களாக சேவையாற்றி தன்னுயிரை காப்பாற்றிவிட்டு உயிர்நீத்தவரின் இரு பிள்ளைகளையும் நீதிபதி இளஞ்செழியன் தத்தெடுத்துக் கொள்வதாக உறுதியளித்துள்ளார்.
இரு பிள்ளைகளையும் தனது சொந்த பிள்ளைகளைப் போல் பராமரித்து, தான் இறக்கும் வரை அவர்களது எதிர்காலத்திற்கு தேவையான சகல விடயங்களையும் ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து செய்வதாக நீதிபதி இளஞ்செழியன் உறுதியளித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நீதிபதியின் உயிரை காப்பாற்றுவதில் தாக்குதல் தாரியுடன் சண்டையிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையல் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதில் சிலாபம் பகுதியைச்சேர்ந்த 51 வயதாகிய சரத் ஹேமச்சந்திர என்ற மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்திருந்தார். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளுமாக இரு பிள்ளைகள் இருக்கின்றனர்.
இவருடைய இறுதிச்சடங்கு சிலாபம் பகுதியில் இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றது.
குறித்த இறுதி நிகழ்வுக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், பல தமிழ் சிங்கள நீதிபதிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.