ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றம் : விடுதலை புலிகளின் தடை நீக்கம்!

eu1ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றமே விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளதானது உலகத் தமிழர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருப்பதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

11 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்தது.

இந்நிலையில் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றமே விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளதானது உலகத் தமிழர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருப்பது மட்டுமின்றி, இந்த தடை நீக்கம் ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனை என்றே கருதுகிறேன்.

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை இராணுவம் நடத்திய மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையை தொடர்ந்து முடக்கி வரும் இலங்கை அரசு இந்த தடை நீக்கத்தின் நோக்கத்தை உணர்ந்து ஈழத் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு, சம உரிமை மற்றும் கண்ணியத்துடன் தமிழர்கள் வாழ்வதற்குத் தேவையான உறுதியான நடவடிக்கைகளை இனிமேலும் காலம் தாழ்த்தாமல் எடுக்க வேண்டும்.

போரின் போது காணாமல் போன தமிழர்களை அடையாளம் காணுவது, தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள இலங்கை இராணுவத்தை அங்கிருந்து வெளியேற்றி அந்த நிலங்களை தமிழர்களிடம் திருப்பி ஒப்படைப்பது, மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவது, இனப்படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிப்பது, ஈழத்தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வை வழங்குவது உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இலங்கை அரசு விரைந்து செயல்பட வேண்டும்.

அத்துடன் ஐரோப்பிய யூனியனே தடையை நீக்கியிருக்கின்ற நிலையில் ஈழத் தமிழர்களுக்கான உரிமைகள் கிடைப்பதற்கு மத்திய அரசு உரிய அழுத்தத்தை இலங்கை அரசுக்கு கொடுக்க வேண்டும்.

ஐரோப்பிய யூனியன் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் நல்லெண்ணத்தை முன்னெடுத்துச் சென்று ஈழத் தமிழர்கள் வாழ்வை சூழ்ந்துள்ள காரிருளை நீக்க மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.