பிணைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் ரவி கருணாநாயக்கவின் ஊழல் விவகாரங்கள் அம்பலமாகியிருப்பதால் அவர் தனது அமைச்சுப் பதவியை உடனடியாகத் துறக்கவேண்டும் என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் கருத்த தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
மத்திய வங்கிக்குள் நுழைந்து விசாரணை நடத்திய முதல் ஆள் நானே. பல்வேறு நிந்தனைகளுக்கும் அவதூறுகளுக்கும் மத்தியில் இந்தப் பணியை நான் தைரியமாகச் செய்தேன்.
இந்தப் பிணைமுறி மோசடிக்குப் பதிலளிக்கவேண்டியவர்கள் ரணில் விக்ரமசிங்கவும், ரவி கருணாநாயக்கவுமே என்று அப்போதே நான் அழுத்தம் திருத்தமாகக் கூறினேன்.
எனினும், அவர்கள் இருவரும் நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தங்களது மோசடிகளை மறைக்க பல்வேறு நாடகங்களை அரங்கேற்றிவந்தார்கள்.
நிதி அமைச்சர் என்ற ரீதியில் அரசுக்குப் பணம் தேவைப்படுவதாகக் கூறும் திகதியிடப்படாத ரவி கருணாநாயக்கவின் கடிதத்தை நான் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்திருந்தேன்.
நிதி அமைச்சரொருவர் ஒருபோதும் செய்யக்கூடாத விந்தையான வேண்டுகோள் கடிதம் இதுவென்பதை ஆணைக்குழுவின் முன்னிலையில் தெளிவுபடுத்தினேன்.
ரவி கருணாநாயக்கவுக்கும் அர்ஜுன் மகேந்திரனுக்குமிடையிலிருந்த நெருங்கிய உறவு பற்றி மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி. நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தினார்.
அலோசியஸ், பல மில்லியன் ரூபா பெறுமதியான சொகுசு வீட்டுத்தொகுதியொன்றை ரவிக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்ற இரகசியமும் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தப்பட்டது.
அந்தச் சமயத்தில் தன்னைத்தவிர மற்றவர்கள் அனைவருமே திருடர்கள் என்ற ரீதியில் ரவி கருணாநாயக்க முழக்கமிட்டது அனைவருக்கும் தெரியும்.
அந்நிய செலாவணி மோசடியில் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராகத் தொடரப்பட்டிருந்த வழக்கு பல வருடங்களாக விசாரிக்கப்பட்ட பின் பாரதூரக் (கிரிமினல்)
குற்றப்பத்திரிகை அவருக்கு வழங்கப்பட்டது.
எனினும், அந்தக் குற்றப்பத்திரிகையில் ஏற்பட்டிருந்த சில தவறுகளைக் காரணங்காட்டி அவரது வழக்கு தள்ளுபடிசெய்யப்பட்டது. தீர்ப்பை வழங்கிய (பெண்) நீதிபதியும் அதன் பின் ஓய்வுபெற்றுவிட்டார்.
இவ்வாறான தில்லுமுல்லுகளைச் செய்துவந்த ரவி கருணாநாயக்கவை பற்றி நாட்டின் ஜனாதிபதியும், பிரதமரும் நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான ஏராளமான முறைப்பாடுகள் ஊழல் துஷ்பிரயோக ஒழிப்பு ஆணைக்குழுவுக்குக் கிடைத்துள்ளபோதிலும் அவை யாவும் மூடிமறைக்கப்பட்டுவிட்டன.
எனினும், பிணைமுறி மோசடி விவகாரத்தில் இப்போது அவரது குட்டு அம்பலமாகிவிட்டது. எனவே, அவர் உடனடியாக தனது அமைச்சுப் பதவியிலிருந்து விலகவேண்டும் என பந்துல குணவர்தன எம்.பி. அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.