காணாமல்போனோர் விவகாரத்துக்கு அரசு இதயசுத்தியோடு செயற்பட்டால் மட்டுமே தீர்வை வழங்கமுடியும். எனினும், அரசு பாதுகாப்புப் படையினருக்கு சார்பாகவே செயற்படுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் சபையில் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று மாலை சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இந்த உயரிய சபையில் காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தை நிறுவுவதற்கான திருத்தச் சட்டவரைபு மீதான விவாதத்தில் உரையாற்றியபோது முக்கிய விடயத்தைச் சுட்டிக்காட்டியிருந்தேன். அதை திரும்பவும் இங்கே நினைவுபடுத்துவது பொருத்தமானது என்று கருதுகின்றேன்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விடயம் விரைந்து தீர்க்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமிருக்கமுடியாது. ஆனால், இதில் பாதிக்கப்பட்டவர்கள், நீங்கள் நிறுவும் இந்த அலுவலகத்தை ஏற்றுக்கொள்வதற்குத் தயாரில்லை.
ஆகவே, இந்த அலுவலகம் நிறுவப்பட்டு அதன் நோக்கம் வெற்றியடையவேண்டுமானால், காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் உறவுகள் விரும்பும் வகையிலான விசாரணைப் பொறிமுறை உள்ளடக்கப்படவேண்டும் என்று இந்தச் சபையில் கோருகின்றேன்” என உரையாற்றியிருந்தேன்.
காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தை நிறுவும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளார். 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்துக்கு வந்த சட்டவரைபு மீது இந்த ஆண்டு ஜூலை மாதமே முற்றுப்பெற்றிருக்கின்றது. அதனை வரவேற்கின்றேன்.
அதேவேளை, நான் மேலே கூறியவாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் உறவினர்கள் இந்த அலுவலகத்தை நிராகரித்திருக்கின்றார்கள். சர்வதேச சமூகத்தை ஏமாற்றவே இந்த அலுவலகத்தை அரசு செயற்படுத்த முனைவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்கள்.
தமது அன்புக்குரியவர்களைத் தேடும் அவர்களது குற்றச்சாட்டுகளை இலகுவில் புறந்தள்ளிவிடமுடியாது. பேரினவாத அரசானது எமக்கு, எமது மக்களுக்கு கடந்த காலங்களில் கற்றுத்தந்த படிப்பினையின் காரணமாகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் உறவினர்கள் இந்த அலுவலகத்தை நிராகரித்திருக்கின்றார்கள்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயம் அரசின் கழுத்தை எப்போது இறுக்குகின்றதோ, அப்போதெல்லாம் ஜனாதிபதி ஆணைக்குழுக்களை நிறுவி விசாரணை என்ற பெயரில் இழுத்தடிப்புகளைச் செய்தார்கள்.
எமது மக்கள் எந்த ஆணைக்குழுக்கள் முன்னால் தமது சோகக்கதையை திரும்பத் திரும்பச் சொல்லுவது. சரி எந்தவொரு ஆணைக்குழுவாவது அவர்களது கதைகளைக் கேட்டு அவர்களுக்கு நியாயங்களைப் பெற்றுக்கொடுத்திருக்கின்றதா? இங்கிருக்கின்ற அரச தரப்புப் பிரதிநிதிகளே உங்களால் இதற்குப் பதில் சொல்லமுடியுமா?
எங்கள் மக்கள் உங்கள் ஆணைக்குழுக்கள் மீதும், உங்கள் விசாரணையாளர்கள் மீதும் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். அவர்கள் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப நீங்கள் என்ன செய்தீர்கள்? அவர்கள் உங்களை நம்பாமல் இருப்பதை வளர்க்கும் வகையிலேயே உங்களின் செயற்பாடுகள் அமைந்திருந்ததை நான் இங்கே சுட்டிக்காட்டியாகவேண்டும்.
திருகோணமலை மாவட்டத்தின் குமாரபுரம் கொலை வழக்கில் அப்பாவித் தமிழ் மக்கள் 1996ஆம் ஆண்டு கொல்லப்பட்டிருந்தார்கள். சந்தேகநபர்களாக இராணுவத்தினர் கைதுசெய்யப்பட்டிருந்தார்கள்.
கடந்த வருடம் அந்த வழக்கில், சிங்கள அறம்கூறும் சபையினர் உள்ளடக்கிய நீதித்துறை எப்படித் தீர்ப்பு வழங்கியது. 20ஆண்டுகளின் பின்னராவது நீதி கிடைக்கும் என்றிருந்த எங்கள் மக்கள் அதில் ஏமாற்றப்பட்டார்கள். இராணுவத்தினர் சுற்றவாளிகளாக விடுவிக்கப்பட்டார்கள்.
நான் இங்கே சுட்டிக்காட்டியது ஓரிரண்டு விடயங்கள் மாத்திரமே. இதைப்போன்ற பல சம்பவங்கள் இருக்கின்றன. நான் கூறிய இரண்டு விடயங்களும், தற்போது ஆட்சி செய்துகொண்டிருக்கின்ற கூட்டு அரசின் காலத்திலேயே நடந்தவை.
இப்படி உங்கள் விசாரணைகள் மீதும், நீதித்துறை மீதும் நம்பிக்கை இழக்கச்செய்யும் வகையில் நீங்களே நடந்துகொண்டதால்தான், எமது மக்கள் காணாமல்போனோர் அலுவலகத்தையும் நிராகரித்திருக்கிறார்கள். அவர்கள் சர்வதேச விசாரணையைக் கோருகின்றனர். அவர்களின் கோரிக்கை நியாயமானது என்பதை நான் இங்கே பதிவுசெய்கின்றேன்.
காணாமல்போனோர் அலுவலகத்தின் ஊடாக வழக்குத் தாக்கல் செய்யமுடியாது. ஆனால், வழக்குத் தாக்கல் செய்யக்கூடிய வகையில், சட்டவரைபு ஆரம்பத்தில் இருந்ததையும் பின்னர் அது நீக்கப்பட்டது என்பதையும் இங்கே குறிப்பிட்டாகவேண்டும். அதாவது, தனித்துப் படையினர் உள்ளிட்ட உங்களின் நலன்களை மாத்திரமே கருத்தில் கொள்கின்றீர்கள்.
பாதிக்கப்பட்டவர்களது எந்தக் கரிசனைகளையும் நீங்கள் கவனத்தில் எடுக்கவில்லை. பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்படுதலை குற்றமாக்கும் சட்டவரைபு நிறைவேற்றப்பட்ட பின்னர், அதனூடாக வழக்குத் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் இருப்பதாக நீங்கள் கூறக்கூடும்.
ஆனால், பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்படுதலை குற்றமாக்கும் சட்டவரைபு மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இந்த மாதம் 5ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படவிருந்தது.
இந்தச் சட்டவரைபை நிறைவேற்றவேண்டாம் என்று பௌத்த மதத்தின் உயர்பீடங்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்தன. இந்தப் பின்னணியில் மேற்படி சட்டம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. எப்போது எடுக்கப்படும் என்பதும் இதுவரை தெரியாது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்தச் சட்டம் படையினருக்கு எதிரான சட்டம் என்று திரும்பத் திரும்பக் கூறிவருகின்றார். அவருடன் சேர்ந்தவர்களும் அவ்வாறுதான் கூறுகின்றனர். படையினருக்கு இந்தச் சட்டம் எந்தவகையில் எதிரானது என்பதை அவர்கள் இதுவரை வெளிப்படுத்தவில்லை.
படையினர் பலவந்தமாகக் கடத்தலில் ஈடுபட்டிருந்தால்தான், இந்தச் சட்டத்தின் ஊடாக அவர்கள் சிக்குப்படுவார்கள். முன்னைய ஆட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறுவதனடிப்படையில், படையினர் சட்டத்துக்கு முரணான வகையில் கடத்தல்களில் ஈடுபட்டிருக்கின்றார்கள். பலவந்தமாக அப்பாவிகளைக் கடத்தியிருக்கின்றார்கள். அதனாலேயே, இந்தச் சட்டத்துக்கு எதிராக அவர் குரல் கொடுக்கின்றார்.
சட்டத்துக்கு முரணான வகையில் கடத்தல்களை மேற்கொண்ட படையினரைப் பாதுகாக்க முன்னாள் ஆட்சியாளர் மஹிந்த மாத்திரமல்ல, தற்போதைய உங்களின் அரசும் முனைப்புக் காட்டுகின்றது. அதனால்தான், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் நீங்கள் அசிரத்தையாகவும், அசமந்தமாகவும் செயற்படுகின்றீர்கள்.
படையினரைக் காப்பாற்றுவதற்காக பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துகளை நீங்கள் உள்வாங்குகின்றீர்கள் இல்லை. பாதிக்கப்பட்ட மக்களின், மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளை மிதிக்கின்றீர்கள். நீங்கள் இவ்வாறு உங்கள் படையினரைக் காப்பாற்றுவதை நோக்காகக்கொண்டே செயற்படுவதன் காரணமாகத்தான் எமது மக்கள் உங்களின் எந்தப் பொறிமுறையையும் நம்ப ஏற்க மறுக்கின்றார்கள்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 150 நாட்களைக் கடந்தும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களை நீங்கள் இந்த நாட்டின் குடிமக்களாகக் கணக்கெடுக்கவில்லை என்பது அவர்களின் போராட்ட நாட்களின் நீட்சி எடுத்தியம்புகின்றது.
படையினரிடம் கையளித்த தங்களது பிள்ளைகள் எங்கே? என்ற கேள்வியை எட்டு வருடங்களாகக் அவர்கள் கேட்டு வருகின்றார்கள். அந்தக் கேள்விக்கான பதிலை நீங்கள் இதயசுத்தியுடன் வழங்காதவரை காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சினை தீராது.
காணாமல்போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டதும், தலையிடியான இந்த விவகாரம் முடிந்துவிட்டது என்று நீங்கள் நினைக்கவேண்டாம்.
எங்கள் மக்களின் பிரச்சினை, அவர்கள் விரும்பிய வடிவிலேயே தீர்க்கப்படவேண்டும் என்று நாங்கள் இங்கே எடுத்தியம்புவது உங்களில் பலருக்கு எரிச்சலூட்டக்கூடியதாக இருக்கும். அதற்காக நாம் பேசாமல் இருக்கமுடியாது.
சிங்கள மக்களைத் திருப்திப்படுத்த உங்கள் வாக்கு வங்கியைத் தக்கவைப்பதற்காக படையினரை தவறிழைத்தவர்களைப் பாதுகாக்க முனையவேண்டாம். அந்த மனோநிலை அரசுக்கு வரவேண்டும். அவ்வாறான மனநிலை அரசுக்கு வந்ததை எங்கள் மக்கள் உணரவேண்டும்.
அப்போதுதான் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் இதயசுத்தியுடன் கையாளப்படும். இல்லாவிடின் தசாப்தங்கள் கடந்தாலும் இந்த விவகாரத்தை தீர்க்க முடியாது என்றார்.