பொது எதிரணியான மஹிந்த அணியின் கூச்சல், குழப்பத்துக்கு மத்தியில் நிதி அமைச்சின் கீழான 6 பிரேரணைகளும், நாட்டைக் கட்டியெழுப்புதல் வரிச் (திருத்தச்) சட்டமூலமும் நாடாளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டன.
நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. இதன்போது, எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அரசால் வெளியிடப்பட்ட வர்த்தமானி குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க விளக்கமளித்த பின்னர், சபையில் கடும் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.
அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய கடுமையாக முயற்சித்தார். எனினும், அது கைகூடவில்லை. தினப்பணிகளுக்குச் செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சபாநாயகர் விடுத்தகோரிக்கையை மஹிந்த அணி ஏற்றுக்கொள்ளவில்லை.
இதையடுத்து சபை முதல்வரால் சட்டமூலமொன்றும், நிதி அமைச்சின் கீழான 6 பிரேரணைகளும் சமர்ப்பிக்கப்பட்டன. பின்னர் அவை விவாதமின்றி நிறைவேற்றப்பட்டன.
விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகளை அங்கீகரிப்பதற்கான 5 பிரேரணைகளும், சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானத்தை அங்கீகரிப்பதற்கான பிரேரணையொன்றும், நாட்டைக் கட்டியெழுப்புதல் வரிச் (திருத்தச்) சட்டமூலமுமே இவ்வாறு விவாதமின்றி நிறைவேற்றப்பட்டன.