இந்த நல்லாட்சி அரசு 2020 வரை ஆட்சிப்பீடத்தில் இருக்கும் என்பது நிச்சயம்.

l2

நல்லாட்சி அரசைக் கவிழ்க்கப்போவதாக மஹிந்த அணியினரான பொது எதிரணியினர் விடும் சவால்கள் வெறும் பகற்கனவே எனவும், அவர்களது கனவு ஒருபோதும் நனவாகப் போவதில்லை எனவும் போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறியுள்ளதாவது,

ஒருசிலரைப்போல எங்களிடம் இரட்டை வேடம் போடும் பழக்கம் கிடையாது. 2015இல் ஜனாதிபதித் தேர்தல் நடந்த சமயம் நாங்கள் எங்களது அப்போதைய தலைவரான மஹிந்த

ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்கினோம். அதன்பின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையை இப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்றார்.

நல்லாட்சி அரசை தேசிய அரசை அமைப்பதற்காக அவர் எங்களுக்கு அழைப்பு விடுத்தார். கட்சியின் இறைமையையும், பாரம்பரியத்தையும் காப்பாற்றுவதற்காக நாங்கள் அவருடன் இணைந்துகொண்டோம். கட்சியின் நிறைவேற்றுக்குழு எடுத்த தீர்மானத்தின் அடிப்படையிலேயே நாங்கள் தேசிய அரசை அமைக்க ஒப்புக்கொண்டோம்.

எனினும், இன்று ஒருசிலர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்தக் கங்கணங்கட்டிக்கொண்டு திரிகிறார்கள். எங்களைப்போல கட்சிக்கு விசுவாசமாக உள்ளவர்களைக் கவர்ந்திழுக்க சூழ்ச்சிகள் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களது சூழ்ச்சிவலையில் நாங்கள் சிக்கமாட்டோம்.

நாங்கள் விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ இந்த நல்லாட்சி அரசு 2020 வரை ஆட்சிப்பீடத்தில் இருக்கும் என்பது நிச்சயம். அதை இடைநடுவில் கவிழ்ப்பதற்கு செய்யும் எந்த சூழ்ச்சியும் பலிக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.