புதிய தேர்தல் முறையின் கீழ் ஒன்பது மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்தப்போவதாகக் காரணங்காட்டி பதவிக்காலம் முடிவடையவுள்ள கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒத்திவைக்க அரசு தீர்மானித்திருக்கின்றது எனத் தெரியவருகின்றது.
ஒன்பது மாகாண சபைகளுக்கான தேர்தல்களையும் புதிய முறைப்படி ஒரே தினத்தில் நடத்துவதே உசிதம் எனப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த பிரேரணையின் அடிப்படையிலேயே அமைச்சரவை இந்தத் தீர்மானத்தை எடுத்திருக்கின்றது என குறிப்பிடப்படுகின்றது.
அமைச்சரவையின் இந்தத் தீர்மானத்துக்கு பொது எதிரணியான மஹிந்த அணி கடுமையான ஆட்சேபத்தை தெரிவித்துள்ளது.
அரசு எந்தத் தேர்தலிலும் தோல்வியைத் தழுவுவது நிச்சயம் எனத் தெரிந்திருப்பதாலேயே இத்தகைய நொண்டிச்சாக்குகளைக் காரணங்காட்டி சகல தேர்தல்களையும் ஒத்திவைத்துக் கொண்டிருக்கின்றது எனவும், பதவிக்காலம் முடிவடையப்போகும் மூன்று மாகாண சபைகளின் தேர்தல்களையும் உரிய காலத்தில் நடத்தவேண்டும் எனவும் பொது எதிரணி வலியுறுத்தியுள்ளது.