ஒகஸ்ட் மாத இறுதிக்குள் இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்படவேண்டும் ! ரணில்

ran1புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை அடுத்த மாத இறுதிக்குள் நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்படவேண்டும். அதற்குரிய வகையில் செயற்படவேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிறைவேற்று ஜனாதிபதி முறைமை தொடர்பான தமது யோசனையை வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கவில்லை.

வழிநடத்தல் குழுவின் 66ஆவது கூட்டம் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று மாலை 3 மணிக்கு இடம்பெற்றது. சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்ற இந்தக்

கூட்டத்தில், வழிநடத்தல் குழுவின் பெரும்பாலான உறுப்பினர்கள் குறிப்பாக, மஹிந்த அணி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை கடந்த 20ஆம் திகதி இறுதிசெய்யப்பட்டு சகல கட்சிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. கட்சிகள் இடைக்கால அறிக்கையுடன் முரண்படும் திருத்தவேண்டிய விடயங்களை நேற்று நடைபெற்ற அமர்வுக்கு முன்னர் சமர்ப்பிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

வழிநடத்தல் குழுவின் அமர்வு நேற்று ஆரம்பமானதும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர், இடைக்கால அறிக்கையின் இறுதி வரைபை வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

கடந்த கூட்டத்தில் இறுதிசெய்யப்பட்டு வழங்கியதுதான் இறுதி வரைபு என்று பதிலளிக்கப்பட்டதும், தமது நிலைப்பாட்டை ஓகஸ்ட் இரண்டாம் வாரத்துக்குள் சமர்ப்பிப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, இடைக்கால அறிக்கையின் வரைபு தொடர்பில் தமது கட்சியின் நிலைப்பாட்டை நேற்று முன்வைத்தார்.

அதில் புதிய அரசமைப்பில் உருவாக்கப்படவுள்ள செனட்டில் 50 சதவீதம் சிறுபான்மையினர், 50 சதவீதம் பெரும்பான்மையினர் என்று இருக்கவேண்டும் என்ற யோசனையை அவர் முன்வைத்தார். இது தொடர்பில் வழிநடத்தல் குழுவில் நேற்றுமுன்தினம் ஆராயப்பட்டது.

அமைச்சர் ரவூப் ஹக்கீம், தேர்தல் முறைமை தொடர்பில் திருத்தம் வழங்குவதாகத் தெரிவித்துள்ளார். அமைச்சர்களான ரிஷாத் பதியுதீன் மற்றும் மனோ கணேசன் இருவரும் தமது திருத்தங்களை இணைந்து ஒரு வாரத்துக்குள் வழிநடத்தல் குழுவுக்கு வழங்குவதாகக் கூறியுள்ளனர்.

மஹிந்த அணியான பொது எதிரணியினர், தமது நிலைப்பாட்டை 48 மணிநேரத்துக்குள் வழிநடத்தல் குழுவுக்குச் சமர்ப்பிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.