நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரை சுட்டுக்கொன்ற சந்தேக நபர் விடுதலைப் புலிகளிடம் தண்டனை பெற்ற ஒருவர் என்று கூறப்படுகிறது. நேற்றைய தினம் பொலிஸாரிடம் சரணடைந்த இவரிடம் நேற்று மாலைவரை வாக்குமூலம் பெறப்பட்டது. இதன்போதே இவர் தொடர்பான மேலதிக தகவல்களும் கிடைத்துள்ளன.
சிவராசா ஜெயந்தன் எனப்படும் முப்பத்தொன்பது வயதான சந்தேக நபர் இரண்டு மனைவிகளின் கணவராகவும் எட்டுப் பிள்ளைகளின் தந்தையாகவும் அறியப்படுகிறார். யுத்த காலத்தில் வன்னிப்பகுதியில் இருந்த இவர் 2000 ஆம் ஆண்டளவில் யாழ் மண்கும்பானைச் சேர்ந்த பெண் ஒருவரைத் திருமணம் செய்து 2002 ஆம் ஆண்டளவில் சமாதான காலத்தில் மண்கும்பானில் வந்து குடியேறியுள்ளார்.
கூலி வேலைகள் செய்துவந்த சந்தேக நபர் பின்னர் ஐஸ்பழம் விற்கும் தொழிலைச் செய்துவந்ததாகவும் அதன்போது வேலணையைச் சேர்ந்த மற்றுமொரு பெண்ணைத் திருமணம் செய்து நான்கு பிள்ளைகளுக்கு தந்தையாகியுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தற்பொழுது வேலணை நான்காம் வட்டாரத்தில் மனைவி பிள்ளைகளோடு வசித்துவந்த இவர் யாழ்ப்பாணம்-குறிகாட்டுவான் பேரூந்துச் சேவையில் சாரதியாகவும் கடமையாற்றிவருவதாகவும் தெரியவந்துள்ளது.
இவர் வன்னியில் இருந்த காலத்தில் 1995,1996,1997ஆம் ஆண்டுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்ததாகவும் பின்னர் அமைப்பிலிருந்து விலகியதாகவும் விலகியதற்கான தண்டனையை விடுதலைப் புலிகளிடமிருந்து பெற்றதாகவும் கூறப்படுகிறது.