இந்திய வீரர்களுக்கு எதிராக தனித்தனியாக திட்டம்

ke

நீண்டதொரு கிரிக்கெட் தொடரில் விளையாட இலங்கை வந்துள்ள இந்திய வீரர்களுக்கு எதிராக தனித்தனியாக திட்டம் வகுத்துள்ளதாக இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தற்காலிக தலைவர் ரங்கன ஹேரத் தெரிவித்துள்ளார்.

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“கடைசியாக சிம்பாப்வே அணிக்கெதிராக நாங்கள் விளையாடிய டெஸ்ட் கிரிக்கெட்டில் 380 ஓட்டங்;களுக்கு மேலான இலக்கை சேசிங் செய்து வெற்றிபெற்றோம். ஆனால் இந்தியா, சிம்பாப்வே அணிகள் வெவ்வேறான பலம் கொண்டவை. இருப்பினும் அதுவும் சர்வதேச போட்டி தான். அந்த வகையில் இந்த வெற்றியின் மூலம் கிடைத்த நம்பிக்கை வீரர்களுக்கு உதவிகரமாக இருக்கும். தற்போது உலகின் நம்பர் ஒன் அணியாக இந்தியா திகழ்கிறது. எனவே இந்த தொடர் சுவாரஸ்யமாகவும், அதே சமயம் எங்களுக்கு சவால் நிறைந்ததாகவும் இருக்கும். இதை சமாளிக்க நாங்கள் சிறப்பு வாய்ந்த திறமையை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

சந்திமால் இல்லாதது எங்களுக்கு இழப்பாகும். அவர் எப்போதும் 100 சதவீத பங்களிப்பை அளிக்கக்கூடியவர். புதுமுக இடக்கை சுழற்பந்து வீச்சாளர் மலிந்த புஷ்பகுமாராவினால் என்னை மிஞ்சி விட முடியும். முதல்தர கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி இருக்கிறார். அவரது சாதனைகளே சிறந்த பந்துவீச்சாளர் என்பதை பறைசாற்றும். நான் ஓய்வு பெறுகிறனோ இல்லையோ, நிச்சயம் அவர் அணியின் 2வது இடக்கை சுழற்பந்து வீச்சாளர் வாய்ப்பில் இருப்பார். கடந்த காலங்களில் நடந்த டெஸ்ட் தொடர்கள் முடிந்து போன விடயம். இது புத்தம் புதிய தொடர். இதை நாங்கள் சிறப்பாக தொடங்க வேண்டியது முக்கியம். ஒவ்வொரு இந்திய வீரர்களுக்கு எதிராகவும் தனித்தனியாக திட்டம் வகுத்துள்ளோம்” என கூறினார்.