தமிழீழ விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்த தடையை நீக்கும் ஆணையை இன்று (26.07.2017) ஐரோப்பிய நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இவ் ஆணை வெளிவந்த சில மணிநேரங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டிருக்கும் டெய்லி மிரர், நியூஸ் பெஸ்ற் போன்ற தென்னிலங்கை ஊடகங்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு ஐரோப்பிய நீதிமன்றம் பிறப்பித்த ஆணை 2015ஆம் ஆண்டிற்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்-தடைகளின் விடயத்தில் மட்டுமே பொருந்தும் என்றும், எனவே 2015ஆம் ஆண்டிற்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்-தடைகளின் அடிப்படையில் அவ்வியக்கத்தின் மீதான தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் தெரிவித்திருக்கின்றன.
அதாவது தென்னிலங்கை ஊடகங்களைப் பொறுத்தவரை தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்பதாகும்.
இது உண்மையா? இல்லையா? என்பது பற்றிய தெளிவுபடுத்தலை விரைவில் அதிகாரபூர்வமான முறையில் ஐரோப்பிய ஒன்றியம் விடுக்கலாம் என நாம் எதிர்பார்க்கலாம்.
இது இவ்விதமிருக்க, தமிழீழ விடுதலைப் புலிகளின் தடைநீக்கத்திற்கு சுவிற்சர்லாந்தில் வசிக்கும் லதன் சுந்தரலிங்கம் என்பவரே காரணம் என்று முகநூல் பக்கங்களில் பரபரப்பாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதிலும் ‘தடைநீக்கிய தமிழன் லதன் சுந்தரலிங்கம்’, ‘தடைநீக்கிய தமிழன் லதன் சுந்தரலிங்கத்திற்கு நன்றிகள்’ என்றெல்லாம் முகநூல் பக்கங்களில் எழுந்தமானமாகப் பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவை போதாதென்று, தமிழ்நெற் இணையமும், ஏனைய சில ஊடகங்களும் லதன் சுந்தரலிங்கத்தை கதாநாயகன் ஆக்கும் பணியில் இறங்கியுள்ளன.
இது சரியா?
தடைநீக்கம் நிகழ்ந்ததா? இல்லையா? என்பதற்கு அப்பால், தடைநீக்க வழக்கில் லதன் சுந்தரலிங்கம் அவர்களின் பங்கு என்ன என்பதை நாம் ஆய்வு செய்த பொழுது கிடைத்த தகவல்கள் இவை:
தமிழீழ விடுதலைப் புலிகளின் தடைநீக்கத்திற்கான வழக்கைத் தொடர்வதற்கான முயற்சிகள் 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. அவற்றை லதன் சுந்தரலிங்கமும், கனடாவில் வசிக்கும் இன்னுமொருவரும் மும்முரமாக மேற்கொண்டனர்.
எனினும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் அவ்வியக்கத்தின் உறுப்பினர்கள் மட்டுமே வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என்று ஐரோப்பிய பொதுநீதிமன்றம் அறிவித்ததை அடுத்து, இவ் வழக்கைத் தமது பெயரில் தாக்கல் செய்வதற்குத் தமிழீழ விடுதலைப் புலிகளின் டென்மார்க் கிளை உறுப்பினர்கள் இருவரும், இன்னுமொரு ஐரோப்பிய நாட்டில் வசிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பக உறுப்பினர் ஒருவரும் முன்வந்தனர்.
தமது பெயரைக் கொடுப்பதால் எதிர்காலத்தில் தம்மீது சட்ட நடவடிக்கைகள்எடுக்கப்படலாம் என்ற அபாயம் இருப்பதைத் தெரிந்து கொண்டும் துணிச்சலுடன் தமது பெயரை இவர்கள் கொடுத்தனர்.
இதன் பின்னர் வழக்கைத் தொடர்வதற்காக சட்டத்தரணிகளுக்கான செலவுகள் என்ற பிரச்சினை எழுந்தது.
அப்பொழுது ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழின உணர்வாளர்களும், செயற்பாட்டாளர்களும் தமது பணத்தை நன்கொடையாக வழங்கி இவ் வழக்கைத் தொடர்வதற்கு வழிவகை செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தாலும், கிளைகளாலுமே மேற்கொள்ளப்பட்டன.
இவற்றோடு வழக்கில் முன்னிலையாகிய சட்டத்தரணிகளின் கட்டணத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கை நெதர்லாந்தில் வசிக்கும் இன்னுமொரு செயற்பாட்டாளர் புரிந்தார்.
இவ்வாறு வழக்கு நகர்ந்து சென்ற பொழுது 2014ஆம் ஆண்டின் முற்பகுதியில் வழக்குத் தொடர்பான சகல நடவடிக்கைகளில் இருந்தும் லதன் சுந்தரலிங்கம் முற்றாக விலகிக் கொண்டார்.
ஆனால் 2014ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் இவ் வழக்கு மீதான தீர்ப்பை ஐரோப்பிய ஒன்றியப் பொதுநீதிமன்றம் வழங்கித் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைநீக்கத்திற்கு ஆணை பிறப்பித்த பொழுது, திடீரென ஊடகங்களில் தோன்றிய லதன் சுந்தரலிங்கம் தானே இவ்வெற்றியின் கதாநாயகனாக உரிமை கோரினார். இதற்கு தமிழ்நெற் போன்ற சில இணையத்தளங்களும் உறுதுணை நின்றன. இதனை அப்பொழுது யாரும் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. ஏனென்றால் தடைநீக்க உத்தரவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் மேன்முறையீடு செய்யும் என்பதால்.
பின்னர் 2015ஆம் ஆண்டின் முதற்கூறில் ஐரோப்பிய ஒன்றியப் பொதுநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக ஐரோப்பிய நீதிமன்றில் ஐரோப்பிய ஒன்றியப் பேரவை வழக்குத் தாக்கல் செய்த பொழுதும் கூட அதில் எந்த விதத்திலும் லதன் சுந்தரலிங்கம் அவர்கள் சம்பந்தப்படவில்லை.
மாறாக இவ்வழக்கின் பிரதான தரப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் டென்மார்க் கிளையும், அதன் இரண்டு முக்கிய உறுப்பினர்களுமே திகழ்ந்தனர்.
(வழக்கின் வெற்றிக்காக உழைத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் டென்மார்க் கிளை: நீதிமன்றத் தீர்ப்பின் முழு வடிவம் அடியில் உள்ளது)
இவர்களின் முயற்சியும், தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பகம் மற்றும் கிளைகள், அக் கிளைகளின் செயற்பாட்டாளர்கள் மற்றும் நிதியுதவி வழங்கிய மக்களின் ஆதரவே இன்று (26.07.2017) தமிழீழ விடுதலைப் புலிகளின் தடைநீக்கத்திற்கான ஆணையை ஐரோப்பிய நீதிமன்றம் பிறப்பிப்பதற்கு வழிகோலியிருக்கின்றது.
தென்னிலங்கை ஊடகங்கள் கூறுவது போல் அல்லாது ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இணங்கத் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் முற்றாக நீக்குமாக இருந்தால், இதற்கு உரிமை கோர வேண்டியவர்கள் இவ்வழக்கிற்கு தமது தலையைக் கொடுத்து நின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் டென்மார்க் கிளையின் இரண்டு உறுப்பினர்களும், அவர்களின் முயற்சிக்குப் பக்கபலமாக நின்ற அனைத்துலக தொடர்பகம், கிளைகள், அவற்றின் செயற்பாட்டாளர்கள், நிதியுதவி வழங்கிய மக்கள் மற்றும் சட்டத்தரணிகளின் கட்டணத்தைக் குறைக்க உதவிய நெதர்லாந்துக் கிளைச் செயற்பாட்டாளரே.
இதில் லதன் சுந்தரலிங்கத்தின் பங்கு சேது பாலத்தை இராமர் கட்டியதாகக் கூறப்பட்ட பொழுது சிறுதுளி மணலைக் காவிச் சென்றதாக இராமாயணத்தில் கூறப்படும் அணிலின் பங்கைப் போன்றது மட்டும் தான்.
எனவே தடைநீக்க முயற்சியில் இருந்து இடைநடுவில் விலகிச் சென்ற ஒரு தனிநபரைக் கதாநாயகன் ஆக்கும் வரலாற்றுத் தவறை இழைக்காது, இக்கூட்டு முயற்சியில் அரும்பணி ஆற்றிய தமிழீழ விடுதலைப் புலிகளின் டென்மார்க் கிளையின் இரண்டு உறுப்பினர்களையும், அவர்களுக்கு உறுதுணையாக நின்ற அனைத்துலகத் தொடர்பக மற்றும் கிளைச் செயற்பாட்டாளர்களையும், மக்களையும், சட்டத்தரணிகளின் கட்டணத்தைக் குறைக்க உதவிய நெதர்லாந்துக் கிளையின் செயற்பாட்டளரையும் பாராட்டுவோம்.