தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் பயங்கரவாத அமைப்பாகவே கருதுகிறது

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயரை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்ச நீதிமன்றம் நேற்றைய தினம் தீர்ப்பளித்துள்ள போதிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

euro

‘’தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் பயங்கரவாத அமைப்பாகவே கருதுவதுவதுடன், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர்ந்தும் அவ்வாறே நீடிக்கும்’’ என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இராணுவ ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை முழுமையாக தோற்கடித்துவிட்டதாக ஸ்ரீலங்கா அரசு கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ம் திகதி அறிவித்ததைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளினால் தாக்குதல் நடத்தப்படக்கூடிய அச்சுறுத்தல்கள் இல்லாத நிலையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அமுலில் உள்ள தடையை நீக்குமாறு யூலை 26 ஆம் திகதியான நேற்றைய தினம் ஐரோப்பிய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததுடன் முடக்கப்பட்டுள்ள அந்த அமைப்பின் சொத்துக்களையும் விடுவிப்பதாகவும் அறிவித்திருந்தது.

எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடைசெய்வதற்காக கடைபிடிக்கப்பட்ட நடைமுறையை உச்ச நீதிமன்றின் தீர்ப்பு கேள்விக்கு உட்படுத்தியிருக்கின்றதே ஒழிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பதற்கும், அதன் சொத்துக்களை முடக்குவதற்கும் அடிப்படையாக அமைந்த விடையங்களை நீதிமன்றின் தீர்ப்பு உள்ளடக்கவில்லை என்பதே ஐரோப்பிய ஒன்றியத்தின் வாதமாக அமைந்துள்ளது.

ஸ்ரீலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் ஆட்சி நிலவும் தற்போதைய காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தடை செய்வது தொடர்பான தீர்மானத்திற்கு ஐரோப்பிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பொருந்தாது என்றும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐரோப்பிய உச்ச நீதிமன்றின் தீர்ப்பிற்கு அமைய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தீதான தடை நீக்கம் 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கே பொருந்தும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதனால் 2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையான பயங்கரவாத அமைப்புக்களின் தடைப் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயரையும் உள்ளடக்க தாம் எடுத்த தீர்மானத்திற்கு ஐரோப்பிய உச்ச நீதிமன்றின் நேற்றைய தீர்ப்பு பொருந்தாது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் இன்றைய செய்திக் குறிப்பில் மிகத் தெளிவாக கோடிகாட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஐரோப்பிய உச்ச நீதிமன்றின் தீர்ப்பை கருத்தில் கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலுக்குள் உள்ளடக்கப்படும் அமைப்புக்களை எதற்காக உள்ளடக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தக்கூடிய அனைத்து சட்ட வரையரைகளும் தெளிவாக ஆராயப்பட்டு உறுதிப்படுத்திக்கொள்வதற்கான நடைறைமுறைகள் பின்பற்றப்படும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருக்கின்றது.

அதேவேளை நாளைய தினம் தமிழீழ விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் தடைப் பட்டியலில் வைத்திருப்பதற்கான விரிவான விளக்கம் அடங்கிய அறிக்கையொன்றும் வெளிவரும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருக்கின்றது.