யாழ். நல்லூர் பகுதியில் வைத்து கடந்த சனிக்கிழமை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்ட தாக்குதல் தொடர்பில் சந்தேகநபரொருவர் சரணடைந்துள்ளார். இந்த சம்பவமானது நன்கு திட்டமிட்டு தன்னை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சி என மா.இளஞ்செழியன் சம்பவத்தை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கூறியிருந்தார்.
வடக்கு, கிழக்கில் நடைபெற்ற பல்வேறு படுகொலைகள் தொடர்பான வழக்குகள் வருடக்கணக்காக நடைபெற்று வருகின்ற போதிலும் கூட தற்போது வரையிலும் யாராலும் உறுதியாக எந்த வித தீர்மானமும் எடுக்க முடியாத நிலை காணப்படுகிறது. இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் யாழில் இடம்பெற்ற இந்த தாக்குதலானது அரசியல் உட்பூசல்கள் நிறைந்த, பாரியதொரு திட்டம் வகுக்கப்பட்ட ஒரு சம்பவமாகவே காணப்படுகிறது. இது இவ்வாறிருக்க சம்பத்தை தானே மேற்கொண்டதாக கூறிக்கொண்டு, சம்பவத்தின் பின்னரான மூன்றாவது நாளில் பிரதான சந்தேக நபர் எனக் கூறப்படும் நபரொருவர் சரணடைந்திருந்தார்.
அவர் முன்னாள் போராளியெனவும் கூறப்பட்டார். இது ஒரு சித்தரிக்கப்பட்ட கதையாகவே காணப்படுகிறது. இந்த கதையில் கதாப்பாத்திரங்களை ஏற்றவர்கள் தங்களுக்குரிய பகுதியை சரியாக முறையாக நடித்து வருகிறார்கள். சம்பவத்தை நன்கு அவதானித்து வரும் சமூக ஆர்வலர்கள் இந்த சம்பவத்தின் பின்னால் வடக்கு அரசியலின் முக்கி புள்ளியொருவர் சம்பந்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி வருகின்றனர்.
அத்துடன், குறித்த அரசியல் முக்கியஸ்தருக்கு இலங்கையின் பிரபல அரசியல் கட்சியொன்றின் தலைவர் உதவிபுரிவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் தற்பொழுது இந்த விடயம் தொடர்பான நிலைமை சிக்கலாகியுள்ளதன் காரணமாக அனைவரும் மௌனம் சாதித்து வருவதாக தென்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் தற்போதைய நிலை தொடர்பில் ஆராயும் போது பல்வேறு சிக்கலான வழக்குகளிலும் ஈடுபட்டு வரும் நீதிபதி மா.இளஞ்செழியன் தனது உயிர் தொடர்பில் ஒவ்வொரு கணமும் அவதானமாக செயற்படுவதே சிறந்தது என பலரும் வலியுறுத்துகின்றனர். எவ்வாறாயினும்,
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் உண்மைகள் பல விரைவில் அம்பலமாகும் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மனதிலும் காணப்படுகிறது.