மன்னார் நீதிமன்ற நீதிபதியாக ஏற்கனவே கடமையாற்றிய நீதிபதியும், தற்போதைய நீதிபதியும் மாந்தை மனித புதை குழி தொடர்பான வழக்கு விசாரணை தொடர்பில் முரண்பாடாக செயற்பட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக பக்கச்சார்பாக செயற்பட்டு வருவதாவும் விசேட குற்ற புலனாய்வு பிரிவினர் நீதிச் சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்த வழக்கு விசாரணை தொடர்பில் நீதிச் சேவை ஆணைக்குழுவின் அறிவுறுத்தலினை மன்று எதிர்பார்த்துள்ளது.
குறித்த வழக்கு விசாரணையினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் குடும்ப உறவுகள் சார்பாக மன்றில் ஆஜரான சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் தெரிவித்தார்.மன்னார் நீதிமன்றத்தில் மன்னார் மாந்தை மனித புதை குழி தொடர்பான வழக்கு விசாரணை இன்று இடம் பெற்றமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரச சட்டத்தரணி அவர்களின் சமர்ப்பணங்களையும், பாதிக்கப்பட்ட மக்களின் சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களின் அடிப்படையிலும் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் மன்னார் மாந்தை மனித புதை குழி தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்படி இருந்த போது விசேட குற்ற புலனாய்வு பிரிவினரினால் (சி.ஐ.டி) நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு குறித்த மனிதப் புதை குழி தொடர்பான வழக்கு விசாரணை தொடர்பில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.
அதாவது ஏற்கனவே இருந்த மன்னார் நீதிமன்றத்தின் நீதிபதியும், தற்போதுள்ள நீதிபதி அவர்களும் குறித்த மனிதப் புதை குழி தொடர்பான வழக்கு விசாரணை தொடர்பில் முரண்பாடாக செயற்படுவதாகவும், பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக பக்கச்சார்பாக செயற்பட்டு வருவதாகவும், அரச சட்டத்தரணிக்கும், விசேட குற்றப்புலனாய்வு பிரிவினர் மீதும் கடுமையாக இருப்பதாகவும் தெரிவித்ததோடு,
குறித்த மனிதப் புதை குழி தொடர்பான வழக்கை வேறோரு நீதிமன்றத்திற்கு மாற்றுமாறும் மறைமுகமான முறைப்பாட்டில் நீதிபதியையும் மாற்றுமாறு கோரியிருப்பதாக தெரிகின்றது.
இதன் அடிப்படையில் இன்று வெளிநாட்டு நிபுணர்களைக் கொண்டு ஏற்கனவே எடுக்கப்பட்ட மனித எச்சங்களை ஆய்வு செய்வது, மனிதப் புதைகுழியில் இருக்கின்ற மிகுதி மனித எச்சங்களை மீட்டு ஆய்வு செய்கின்றமை தொடர்பாக வெளிநாட்டு நிபுணர் குழுவினரை அழைத்து ஆய்வு செய்கின்றமை தொடர்பான கட்டளை ஒன்று வழங்கப்பட இருந்த நேரத்தில்,
இவ்வாறான ஒரு முறைப்பாடு செய்யப்பட்டதன் அடிப்படையில் மன்னார் நீதிமன்றம் அதற்கான கட்டளையினை ஆக்காது நீதிச் சேவை ஆணைக்குழுவின் அறிவுறுத்தலின் பின்பு அதற்கான கட்டளையை ஆக்குவதாக கூறி இவ் வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் குடும்ப உறவுகள் சார்பாக மன்றில் ஆஜரான சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் தெரிவித்தார்.
குறித்த வழக்கு வசாரணைகளின் போது மன்னார் சட்டத்தரணிகள் சார்பாக சட்டத்தரணிகளான எம்.எம்.சபூர்தீன், ஜெபநேசன் லோகு மற்றும் எஸ்.பிரிமூஸ் சிறாய்வா ஆகியோரும் மன்றில் ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.