ஜெர்மனியில் தாக்குதல் ஒருவர் பலி- பலர் காயம் -(வீடியோ)

germany

ஜெர்மனியில் இன்று சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்த நபர் திடீரென கத்தியால் சரமாரியாக வெட்டியதில் ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர்.

ஜெர்மனியின் வடக்கு பகுதியில் உள்ள ஹம்பர்க் நகரின் பாம்பெக் பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இன்று வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு நபர் திடீரென சூப்பர் மார்க்கெட்டுக்குள் ஓடி வந்துள்ளார்.

வந்த வேகத்தில் வாடிக்கையாளர்களை நோக்கி சென்ற அந்த நபர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக வெட்டத் தொடங்கினார்.

இதனால் பலருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பலரை தாக்கிய அந்த நபர், மார்க்கெட்டில் இருந்து தப்பி ஓடியுள்ளார். இந்த தாக்குதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலர் காயம் அடைந்தனர்.

germany2

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அப்பகுதி முழுவதையும் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபரை தேடி வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.