போர் முடிவுக்கு வந்த எட்டு ஆண்டுகளுக்குப் பின்னரும், வடக்கு கிழக்கில் வாழும் தமிழ்ப் பெண்கள் போர்க்கால மீறல்கள் பற்றிய உண்மை மற்றும் நீதியைத் தேடி அலைந்து கொண்டிருப்பதாக, அனைத்துலக முரண்பாட்டுக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“2015ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சிறிலங்கா அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.
மோதல்களினால் பாதிக்கப்பட்ட குழுக்களுக்கான அவசர பொருளாதார மற்றும் உளவியல் தேவைகள் பெற்றுக் கொடுக்கப்படவில்லை.
போரின் வழி வந்த துன்பங்கள், தொடர்கின்றன. குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் இதனை அதிகளவில் அனுபவித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண்களின் மிகஅவசரமான கோரிக்கையாக இருப்பது, காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் தலைவிதியை அறிவது தான்.
அவர்கள் உண்மை மற்றும் நீதியைத் தேடுகின்றனர். பொருளாதார, சமூக, உளவியல், மற்றும் பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு பரந்த அணுகுமுறையின் பாகமாக நிலைமாறுகால நீதிப் பொறிமுறை அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
சுதந்திரமான அதிகாரிகள், பணியகங்கள் மற்றும் தேவையான வளங்களுடன், சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக காணாமல் போனோர் பணியகத்தை இயங்கச் செய்ய வேண்டும்.
இதன் கிளைகள் வடக்கு கிழக்கிலும் அமைக்கப்பட வேண்டும்.” என்றும் அனைத்துலக முரண்பாட்டுக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.