இலங்கை கிரிக்கெட் அணிக்கு விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்தது இலங்கை கிரிக்கெட் வாரியம்

P-S

எங்கள் நாட்டிற்கு விளையாட வாருங்கள் என்று பாகிஸ்தான் அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை இலங்கை நிராகரித்துள்ளது.

எங்கள் நாட்டிற்கு விளையாட வாருங்கள்: பாக். அழைப்பை நிராகரித்தது இலங்கை கிரிக்கெட் வாரியம்
இலங்கை கிரிக்கெட் அணி கடந்த 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானில் விளையாடிக் கொண்டிருந்தது. இலங்கை வீரர்கள் ஓட்டலில் இருந்து லாகூர் மைதானத்திற்கு பஸ்சில் வந்தபோது தீவிரவாதிகள் இலங்கை வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் வீரர்கள் காயத்துடன் உயிர்தப்பினார்கள்.

உடனடியாக தொடரை ரத்து செய்து சொந்த நாடு திரும்பியது இலங்கை அணி. அதில் இருந்து தற்போது வரை எந்த அணியும் பாகிஸ்தான் சென்று விளையாட விரும்பவில்லை.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பல்வேறு முயற்சிகளை முற்கொண்டு வருகிறது. ஆனாலும் பலன் கிடைக்கவில்லை. ஒரு வழியாக இந்த வருடத்திற்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இறுதிப் போட்டியை பாகிஸ்தான் மண்ணில் நடத்தியது. அதன்பிறகாவது மற்ற நாடுகள் வருமா? என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இலங்கை அணியை தங்கள் நாட்டில் வந்து டி20 கிரிக்கெட்டில் விளையாடுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை இலங்கை கிரிக்கெட் வாரியம் நிராகரித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷகாரியார் கான் கூறுகையில் ‘‘ஐசிசி கூட்டத்தின்போது இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவருடன் பேசினேன். அப்போது அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் தொடரில் இரண்டு போட்டிகளை லாகூரில் நடத்துவோம். மீதமுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் வைத்துக் கொள்வோம். லாகூரில் விளையாட வாருங்கள் என்று அழைப்பு விடுத்தேன்.

தங்கள் நாட்டு அரசுடன் பேசி அனுமதி வாங்குவதாக இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் என்னிடம் உறுதியளித்தார். ஆனால் கடந்த வாரம் லாகூரில் நடைபெற்ற குண்டுவெடிப்பை காரணம் காட்டி பாகிஸ்தான் வந்து விளையாட இலங்கை மறுத்துள்ளது. இலங்கை மறுப்பு தெரிவித்தது எனக்கு சற்று ஆச்சர்யம் அளித்தது.

ஏனென்றால், உலகின் எங்கெல்லாம் குண்டுவெடிப்பு நடக்கிறதோ, அங்கெல்லாம் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பாதுகாப்பு காரணம் காட்டி பாகிஸ்தானை மட்டும் புறக்கணிப்பது நியாயமில்லை’’ என்றார்.