பாகுபலி பட வரிசையில் இணைந்த விஜய்யின் `மெர்சல்’

இந்த ஆண்டின் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்று விஜய்யின் மெர்சல். அட்லி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில், இறுதிகட்ட படப்படிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இப்படத்தின் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டின் விநியோக உரிமையை எம்.கே.ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. அதனைத் தொடர்ந்து மெர்சல் படத்தின் கேரள விநியோக உரிமையை `பாகுபலி’ படத்தை கைப்பற்றிய குளோபல் யுனிடெட் மீடியா நிறுவனம் ரூ.7 கோடிக்கு வாங்கியிருக்கிறது. கேரளாவில் அதிக தொகைக்கு விலை போன முதல் விஜய் படம் மெர்சல் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடிக்கின்றனர். இவர்களுடன் சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா, சுனில், மிஷா கோஷல், யோகி பாபு, ஹரீஷ் பேரடி, மொட்டை ராஜேந்திரன், சீனு மோகன், சண்முக சிங்காரம் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. எஸ்.ஜே.சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தனது 100-வது படமாக தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

`மெர்சல்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாதம் வெளியாகிறது.