தமிழீழ விடுதலைப் புலிகள்’ அமைப்பின் மீதான தடையை நீக்கி வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பினை வழங்கியிருக்கிறது ஐரோப்பிய ஒன்றிய தலைமை நீதிமன்றம்! 10 ஆண்டுகளுக்குப் பிறகு, கிடைத்திருக்கும் நல்லதொரு தீர்ப்பு இது.
இந்தியாவில், ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு ‘விடுதலைப் புலிகள் அமைப்பு’, பயங்கரவாத அமைப்பாகக் குற்றம் சுமத்தப்பட்டு தடை செய்யப்பட்ட இயக்கமாகவே தொடர்ந்து வருகிறது.
ராஜீவ் படுகொலைச் சம்பவம் நிகழ்ந்து கால் நூற்றாண்டைக் கடந்துவிட்ட பின்னரும்கூட இவ்வழக்கில், பல்வேறு மர்ம முடிச்சுகள் இன்னமும் அவிழ்க்கப்படாமலேயே தொடர்கின்றன. வழக்கை புலன்விசாரணை செய்த ஜெயின் கமிஷன் அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை இன்னும் தொடர்கிறது. ஆனால், அதன்பிறகும்கூட இவ்வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
ஏற்கெனவே குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் உள்ளிட்ட ஏழு பேரும் கடந்த 26 ஆண்டுகளாக சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார்கள். இவர்கள், பரோலில் வெளியே வருவதுகூட பல்வேறு அரசியல் காரணங்களால் தடைபட்டுக் கொண்டே போகிறது.
‘ராஜீவ் படுகொலை வழக்கை விசாரணை செய்த அதிகாரி, ‘குற்றவாளிகள் தரப்பிலான வாக்குமூலமாக அவர்கள் சொன்னதை நாங்கள் பதிவுசெய்யவில்லை’ என்று இப்போது சொல்கிறார். வழக்கை விசாரித்து தண்டனையை உறுதிசெய்த உச்ச நீதிமன்ற நீதிபதியோ, ‘யாருக்கும் தண்டனை கொடுக்கப்படாமல் இருந்தால், அது தவறாக நினைக்கப்படும் என்ற எண்ணத்தில் அப்படியொரு தீர்ப்பை அளித்துவிட்டோம்’ என்று இப்போது வருத்தப்படுகிறார்.
இந்நேரத்தில், ‘விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை இந்தியாவும் விலக்கவேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருக்கும் தமிழர் தேசிய இயக்க முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன், ராஜீவ் படுகொலை வழக்குக் குறித்தான விஷயங்கள் குறித்துப் பேசுகிறார் இங்கே….
“ராஜீவ் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் நாங்கள்தான் வழக்கு நடத்தினோம். இந்தியாவில் உள்ள 5 மூத்த வழக்கறிஞர்களுள் மிகவும் மூத்தவரான என்.நடராஜன்தான் எங்கள் தரப்பில் வாதாடினார்.
கே.டி.தாமஸ் தலைமையிலான 3 நீதிபதிகளைக் கொண்ட அமர்வுதான் விசாரித்தது. அப்போது 3 நீதிபதிகளுமே, ‘இது ஒரு சாதாரண கிரிமினல் வழக்கு. தடா சட்டத்தின் கீழ் இவ்வழக்கு போடப்பட்டுள்ளது செல்லாது’ எனத் தீர்ப்பளித்தனர்.
இப்படியொரு தீர்ப்பை அவர்கள் அளித்ததற்கு காரணம் இருந்தது. அதாவது, ‘ராஜீவ் படுகொலை பயங்கரவாத செயலாகக் கருதப்படுமேயானால், அதன் தொடர்ச்சியாக நாட்டில் பல்வேறு வகையான குழப்பங்கள், கொலைகள், கலவரங்கள் நடந்திருக்க வேண்டும். ஆனால், இந்தச் சம்பவத்துக்குப் பிறகு அப்படியான நிகழ்வுகள் எதுவும் நடைபெறவில்லை.
இது தனிப்பட்ட நபர்களுக்கு இடையிலான விருப்பு வெறுப்பு அடிப்படையில் நடைபெற்ற கொலைச்சம்பவம்தான். எனவே, இதனை கிரிமினல் சட்டத்தின் அடிப்படையில்தான் வழக்குப் பதிவு செய்திருக்கவேண்டும். தடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியது செல்லாது’ எனத் தெளிவாக அறிவித்துவிட்டனர். ஆனாலும் குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை, 4 பேருக்குத் தூக்குத் தண்டனை என்று தீர்ப்பில் கூறப்பட்டது.
‘இந்த வழக்கு தடா சட்டதின் கீழ் போடப்பட்டது செல்லாது’ என்று கூறிய நீதிமன்றம், அந்தத் தடா சட்டத்தின் கீழ் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில், இவர்களுக்குத் தண்டனை விதித்தது எப்படி சரியாகும்? எனவே, ‘குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்யவேண்டும்’ எனக்கோரி மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்தோம்.
இதுதான் எங்களுக்கான கடைசி வாய்ப்பு. ஆனாலும்கூட அந்த மறு ஆய்வு மனுவை கே.டி.தாமஸ் தலைமையிலான 3 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரிக்க மறுத்து தள்ளுபடி செய்துவிட்டது.
அடுத்தகட்டமாக இதே வழக்கை வேறு நீதிபதிகளும் விசாரிக்கமுடியாது. எனவே, தூக்குத் தண்டனையில் இருந்து சம்பந்தப்பட்டவர்களை விடுவிக்கக் கோரும் கருணை மனுவை தமிழக ஆளுநருக்கு எழுதினோம்.
அப்போது கவர்னராக இருந்த ஃபாத்திமா பீவி, ஒரே வாரத்தில், இந்த 4 பேர் மீதான கருணை மனுவையும் எந்தவித உறுதியும் செய்யாமல், தள்ளுபடி செய்துவிட்டார். உடனே, நாங்கள் ‘கவர்னரின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பி’ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அப்போது வழக்கறிஞராகப் பணியாற்றிக்கொண்டிருந்த மூத்த வழக்கறிஞரான சந்துருதான் எங்கள் தரப்பில் வாதாடினார்.
‘அமைச்சரவை கூடி என்ன பரிந்துரை செய்கிறதோ அதை ஏற்றுக்கொண்டுதான் கவர்னரோ, குடியரசுத் தலைவரோ செயல்பட வேண்டும். மற்றபடி அவர்களாகத் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது’ என்று வாதம் வைத்தார் சந்துரு.
அரசுத் தரப்பிலோ, ‘அரசியல் சட்டம் அமல்படுத்தப்பட்டு இந்தியா குடியரசு நாடாக ஆனதிலிருந்து, குடியரசுத் தலைவரும் ஆளுநர்களும்தான் 700-க்கும் மேற்பட்ட கருணை மனுக்களில் முடிவு எடுத்திருக்கிறார்கள். ஒருமுறைகூட எந்த மாநில அமைச்சரவையோ, மத்திய அமைச்சரவையோ இதில் தலையிடவில்லை. எனவே இப்போதும் தமிழக ஆளுநர் எடுத்த முடிவு சரிதான்’ என்று பதில் வாதம் வைத்தனர்.
‘இதுவரை நீங்கள் தவறு செய்திருக்கலாம். நாங்கள் இந்த 4 பேருக்காக வாதாடவில்லை. தொடர்ந்து நீங்கள் அரசியல் சட்டத்தை மீறி செயல்படுகிறீர்கள் என்பதை எடுத்துக்காட்டத்தான் வாதாடுகிறோம்’ என்றார் சந்துரு. இறுதியில், ‘கருணை மனுவை ஆளுநர் நிராகரித்தது செல்லாது’ என்ற தீர்ப்பும் கிடைத்தது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி இரக்கம் காட்டியதின் பேரில், நளினிக்கு மட்டும் மரண தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாகக் குறைத்தார் அப்போதைய தமிழக முதல்வரான கருணாநிதி.
அடுத்ததாக, சதாசிவம் தலைமை நீதிபதியாக இருந்தபோது, மீதமிருந்த 3 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிவிட்டுப் போனார். கால் நூற்றாண்டைக் கடந்து இப்போதுவரை 7 பேரும் சிறைவாசம் அனுபவித்துவருகிறார்கள்.
உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டதுபோல், ராஜீவ் காந்தி படுகொலையை சாதாரண கிரிமினல் வழக்காகப் பதிவுசெய்திருந்தால், இவ்வழக்கு முதலில், மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடைபெற்றிருக்கும்; அதன்பிறகு செஷன்ஸ் கோர்ட்; அங்கும் சரியான தீர்ப்பு கிடைக்காவிடில், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம்வரையிலும் சென்று வாதாடி நீதியைப் பெற வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.
ஆனால், தடா வழக்கின்கீழ் பதிவு செய்யப்பட்டுவிட்டதால், தடா கோர்ட் தீர்ப்புக்குப் பிறகு நேரடியாக உச்ச நீதிமன்றத்துக்குத்தான் செல்லமுடிந்தது. இதனால், குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்கள் நீதி பெறுவதற்கான பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டுவிட்டன என்றே சொல்லவேண்டும்.
ஏனெனில், தடா கோர்ட் வழக்கு விசாரணையின் முடிவில், குற்றம் சாட்டப்பட்டிருந்த 26 பேருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றம் செய்யுமாறு தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோதுதான், 4 பேருக்குத் தூக்குத் தண்டனை 3 பேருக்கு ஆயுள் தண்டனை, மற்றவர்களுக்கு விடுதலை எனத் தீர்ப்பு கிடைக்கப்பெற்றது.
இதுமட்டுமல்ல… ‘வாக்குமூலத்தில், அவர்கள் சொன்னதை நான் எழுதவில்லை…. வேண்டுமென்றே தவறு செய்துவிட்டேன். தப்புதான்’ என்று இவ்வழக்கின் விசாரணை அதிகாரியான ரகோத்தமன் இப்போது சொல்கிறார்.
அதேபோல், உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கை விசாரித்து தண்டனையை உறுதிசெய்த நீதிபதி கே.டி.தாமஸும்கூட பணி ஓய்வு பெற்ற பிறகு, ‘தவறு செய்துவிட்டோம்.
இந்தியாவில் பிரதமராக இருந்தவர், படுகொலை செய்யப்பட்ட வழக்கில், யாருக்கும் தண்டனை கொடுக்கப்படாமல் இருந்தால், அது தவறாக நினைக்கப்படும் என்ற எண்ணத்தில் அப்படியொரு தீர்ப்பை அளித்துவிட்டோம்’ என்று இப்போது வருத்தப்படுகிறார்.
‘தவறு செய்துவிட்டோம்’ என்று இவர்கள் காலம்கடந்து வருத்தப்படுவதால், யாருக்கு என்ன லாபம்? குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஏழு பேரும் 26 ஆண்டுகளாக சிறைக்குள் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு நிற்கிறார்கள். இவர்களுடைய பெற்றோர் ஒரு கால் சுடுகாட்டிலும் ஒரு கால் வீட்டிலுமாக ‘மகன் வருவான்’ என்ற நம்பிக்கையுடன் இறுதிமூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு கிடக்கிறார்கள்.
இன்றையச் சூழ்நிலையில், இவர்களை விடுவிக்கும் அதிகாரம் என்பது மத்திய – மாநில அரசுகளின் கைகளில்தான் இருக்கின்றன… அரசியல் பேசாமல், மனிதாபிமானத்தோடு செயல்படும் ஓர் அரசியல் தலைவர் இங்கே இருந்தால், நிச்சயம் நீதி கிடைக்கும்!”
– நம்பிக்கை வார்த்தைகளில் பேசி முடிக்கிறார் பழ.நெடுமாறன்,