கட்சிகளுக்கிடையே நிலவும் முரண்பாடுகளை எப்படி தீர்ப்பது: ஜனாதிபதியும் பிரதமரும் பேச்சு

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகள் இடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளை எப்படி தீர்ப்பது என்பது தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இடையில் நடைபெற்றுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்திற்கு எதிரான சவால்களை கூட்டாக எதிர்நோக்க வேண்டியது முக்கியத்துவம் குறித்து இருவரும் வலியுறுத்தியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹசீம் உட்பட அமைச்சர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விமர்சிப்பது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கொலன்னாவ தொகுதி அமைப்பாளர் எஸ்.எம். மரிக்காரின் புதிய அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் , அமைச்சர் கபீர் ஹசீம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விமர்சித்தது குறித்து ஜனாதிபதி பங்களாதேஷில் இருந்து அமைச்சர் மலிக் சமரவிக்ரமவிடம் விசாரித்துள்ளார்.

அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர் டிலான் பெரேரா, ஐக்கிய தேசியக் கட்சியை கடுமையாக விமர்சித்து வருவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியினர் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

இந்த விடயங்கள் குறித்து அரசாங்கத்தின் இரண்டு தலைவர்களும் விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.

எதிர்காலத்தில் இப்படியான முரண்பாடுகள் ஏற்படாத வகையில் செயற்படுவது என இரண்டு தலைவர்களும் இணங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும் அரசாங்கத்தை சீர்குலைக்க கூட்டு எதிர்க்கட்சி மேற்கொள்ளும் பணிப்புறக்கணிப்பு உட்பட எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு கடும் நிலைப்பாட்டில் இருந்து செயற்படுவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்திக் கொடுப்பது எனவும் இரு தலைவர்களும் தீர்மானித்துள்ளனர்.

இதனை தவிர கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி புதிய அரசாங்கத்தை அமைத்த போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் பிரதான வாக்குறுதியான ஊழல், மோசடி, குற்றச் செயல்கள் சம்பந்தமான விசாரணைகளை துரிதப்படுத்துவதும் பற்றி சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுடன் விசேட பேச்சுவார்த்தைகளை நடத்தவும் இரண்டு தலைவர்களும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரியவருகிறது.