யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து சுமார் 30 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் தமது சொந்த மண் தேடி வரும் மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தாது அவர்களுக்கான உதவிகளை வழங்க வேண்டும். இனவாதம், மதவாதம் இன்றி அனைவரும் ஒற்றுமையாக நடந்து கொண்டால் இப்பிரதேசத்தின் நலனுக்கு மிக பக்கபலமாக அமையும் என அமைச்சர் றிஸாட் பதியுதீன் தெரிவித்தார்.
மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் அவர்களின் நெறிப்படுத்தலில் இணைத்தலைவர்களான அமைச்சர் றிஸாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகியோரின் தலைமையில் இன்று காலை இடம் பெற்றது.
இதன் போது மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் தற்போது வரை நடந்து முடிந்துள்ள அபிவிருத்திகள், நடந்து கொண்டிருக்கும் அபிவிருத்திகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
குறிப்பாக வீதி, போக்குவரத்து, விவசாயம்,கால்நடை,மீன்பிடி, குடி நீர், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகள் தொடர்பிலும் அவற்றில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
எனினும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் மக்கள் எதிர் நோக்கி வருகின்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்து கொண்ட கிராம மட்ட பிரதி நிதிகள் இணைத்தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
குறிப்பாக வீட்டுத்திட்டம் கிடைக்கப்பெற்றுள்ள போதும் அதற்கு தேவையான மண்ணை சகல அனுமதிகளுடனும் பெற்றுக்கொண்டால் வனவளத்திணைக்கள அதிகாரிகள் இடையூறை ஏற்படுத்துவதாக விசனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த பிரதேசத்தில் உள்ள மக்களின் பல ஏக்கர் காணிகள், விவசாயக்காணிகள் போன்றவற்றை வனவளத் திணைக்களத்தினுடையாது என அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறித்தும் பாதிக்கப்பட்டவர்கள் இணைத்தலைவர்களிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
மாந்தை மேற்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திட்டங்கள் பல இடை நடுவே கைவிடப்பட்டுள்ளமை, விவசாய குளங்கள் புனரமைப்பு செய்யப்படாமை,சட்ட விரோத மண் அகழ்வு,சட்ட விரோதமாக மரம் வெட்டுதல் மற்றும் உரிய அதிகாரிகளின் அசமந்த போக்கு தொடர்பில் பல் வேறு பிரச்சினைகள் முன் வைக்கப்பட்டது.
மக்களின் பிரச்சினைகள் கேட்றிந்த பின் மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே இணைத்தலைவர்களில் ஒருவரான அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
மாந்தை மேற்கு பிரதேசத்தில் உள்ள பல ஏக்கர் கணக்கான காணிகள் வனவளத்திணைக்களத்தினால் உள்வாங்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளனர்.
எதிர்வரும் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ள மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் குறித்த விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடவுள்ளோம்.
மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற அதிகாரிகள் பலர் இந்த அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு சமூகமளிக்கவில்லை. பல்வேறு திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் வருகை தந்துள்ளனர்.
ஆனால் முக்கிய சில திணைக்களங்களைச் சேர்ந்த எவரும் கலந்து கொள்ளவில்லை. எதிர்காலங்களில் இடம் பெறும் இவ்வாறான கூட்டங்களுக்கு திணைக்களங்களின் அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும்.
இப்பிரதேசத்து மக்களும், அமைப்புக்களும் இணைந்து பிரதேச செயலாளருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இப்பிரதேசத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கும், மக்களின் பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்கு விவசாயம், மீன் பிடி போன்றவற்றை முன்னேற்றுவதற்கும் அனைவரும் இணைந்து ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர், மாகாண சபை உறுப்பினர்கள்,அனைவருடனும் இணைந்து இந்த மாவட்டத்தை கட்டி எழுப்புவதற்கு தயாராக இருக்கின்றனர்.
அதிகாரிகளுக்கு உரிய கௌரவத்தை கொடுத்து அவர்களுடன் உறவாடுகின்ற போது அவர்கள் மன நிறைவுடன் தமது கடமைகளை மேற்கொள்ளுவார்கள்.
எனவே அதிகாரிகளுடன் இணைந்து தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். கட்சி பேதங்களுக்கு அப்பால் , இன, மத பேதங்களுக்கு அப்பால் அனைவரும் ஒற்றுமையுடன் செயலாற்ற வேண்டும்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து சுமார் 20 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் தமது சொந்த மண் தேடி வரும் மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தாது அவர்களுக்கான உதவிகளையும் வழங்க வேண்டும்.
இனவாதம், மதவாதம் இன்றி அனைவரும் ஒற்றுமையாக நடந்து கொண்டால் இப்பிரதேசத்தின் நலனுக்கு மிக பக்கபலமாக அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.
மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திற்கு திணைக்கள தலைவர்கள், கிராம அலுவர்கள்,கிராம மட்ட தலைவர்கள், பொது அமைப்புக்கள், விவசாய, மீன்பிடி, கால்நடை அமைப்புக்களின் பிரதிநிதிகள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.