வித்தியா கொலை வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பில் பதிலளிக்க முடியாது : அமைச்சர் விஜயகலா

VIYAKALAபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் தனது பெயரை தொடர்புபட்டுள்ளமை குறித்து உத்தியோகபூர்வமாக தனக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பில் பதிலளிக்க முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள ஊடகமொன்று அவரிடம் கேள்வியெழுப்பிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு ஊர்காவற்துறை நீதிமன்றம் குற்ற விசாரணை திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவின் வாக்குமூலத்தை கருத்திற் கொண்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

வித்தியாக கொலை தொடர்பில் பிரதான சந்தேகநபரான சுவிஸ் குமார் என்பவர் தப்பி செல்வதற்கு உதவியதாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.