பந்து வீச்சுக்கு சாதகமில்லாத காலி மைதான ஆடுகளத்தில் கிடைத்திருக்கும் இலங்கை அணிக்கெதிரான வெற்றி சிறப்பு வாய்ந்தது என இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
நேற்று (சனிக்கிழமை) நடைபெற்று முடிந்த இலங்கை அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், 304 ஓட்டங்களினால் வெற்றிபெற்றதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே கோஹ்லி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், “கடந்த 2015ஆம் ஆண்டு இங்கு நடந்த டெஸ்டில் 176 என்ற இலக்கை நோக்கி வெற்றி பெற்றிருக்க வேண்டும். அந்த தோல்வி எங்களது மனஉறுதியை சீர்குலைப்பதாக அமைந்தது. ஆனால் இந்த முறை ஒருங்கிணைந்து நேர்த்தியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி கண்டிருக்கிறோம். மேலும் இப்போது நாங்கள் மிகவும் அனுபவம் வாய்ந்த அணி. களத்திலேயே அதை பார்த்து இருப்பீர்கள். ஒவ்வொருவரும் பொறுப்புடன் விளையாடினர்.
கடந்த முறை இங்கு விளையாடியதுடன் ஒப்பிடும் போது ஆடுகளம் மிகவும் கடினமாக இருந்தது. அதாவது ஆடுகளம் பந்து வீச்சுக்கு பெரிய அளவில் ஒத்துழைப்பு தரவில்லை. இதனால் பந்து வீச்சாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது. அத்தகைய நிலையில் கிடைத்திருக்கும் இந்த வெற்றியை சிறப்பு வாய்ந்ததாக கருதுகிறேன். அடுத்த டெஸ்டுக்கு லோகேஷ் ராகுல் உடல்தகுதி பெறும் போது, யார் தொடக்க ஜோடி என்ற தலைவலி வந்து விடும். அபினவ் முகுந்தின் துடுப்பாட்டம் அருமையாக இருந்தது. சதம் அடிப்பதற்கு அவர் தகுதியானவர்” என கூறினார்.