இந்தியாவிடம் தோற்றதற்கு ஹேரத் வருத்தம்

herath

இந்தியக் கிரிக்கெட் அணி எங்களை முழுமையாக தோற்கடித்து விட்டனர் என இலங்கை டெஸ்ட் அணியின் தற்காலிக தலைவர் ரங்கன ஹேரத் தெரிவித்துள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) நடைபெற்று முடிந்த இந்திய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், 304 ஓட்டங்களினால் தோல்விபெற்றதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே ஹேரத் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “இந்த டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சி முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக நினைக்கவில்லை. ஆடுகளம் துடுப்பாட்டத்துக்கு உகந்ததாக காணப்பட்டது. மூன்று துறைகளிலும் நாங்கள் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமாகும். எல்லா வகையிலும் அற்புதமாக விளையாடிய இந்தியாவுக்கே ஒட்டுமொத்த பெருமையும் சாரும்.

குணரட்ன காயத்தால் விலகியது எங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். அவர் 8 வாரங்கள் விளையாட முடியாது. எனக்கு விரலில் ஏற்பட்ட காயம் இப்போது பரவாயில்லை. முன்பு எலும்பு முறிவு ஏற்பட்ட விரலில் தான் இப்போதும் காயம் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த முறை எலும்பு முறிவு இல்லை” என கூறினார்.