நல்லூரில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் முதன்மைச் சந்தேக நபர் என்று பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்ட சிவராசா ஜெயந்தனுக்குக் கொடுப்பதற்காக அவரது மனைவி கொண்டு வந்த பார்சலில் இருந்து மின்சாரக் கடத்தலைப் பரிசோதிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ’ரெஸ்ரர்’, சிறைச்சாலை அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜெயந்தனின் மனைவி சிறைச்சாலை அதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டார்.
நல்லூர் கோயில் பின் வீதியில் கடந்த சனிக்கிழமை, யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், அவரது மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்திருந்தார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய முதன்மைச் சந்தேகநபர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார். நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டு எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தனிச் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். இவரைப் பார்ப்பதற்கு இவரது மனைவி கடந்த வியாழக்கிழமை, யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார்.
அவர் கொண்டுசென்ற பொதிகளைச் சிறைக்காவலர்கள் சோதனையிட்டுள்ளனர். உடுப்புகளுக்குள்ளிருந்து ‘ரெஸ்ரர்’ (மின்சாரக் கடத்தலைப் பரிசோதிக்கும் கருவி) மீட்கப்பட்டுள் ளது. சந்தேக நபரின் மனைவியைச் சிறைக்காவலர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர். அத்துடன் சிறைக்கு வந்து அவரது கணவரைப் பார்வையிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளதாகச் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.