இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நோயாளர் காவு வண்டிச் சேவை சிறிலங்கா முழுவதற்கும்

ambulanceஇந்திய அரசாங்கத்தின் உதவியுடன்  இரண்டு மாகாணங்களில் ஆரம்பிக்கப்பட்ட அவசர நோயாளர் காவு வண்டிச் சேவையை, நாடு முழுவதிலும் விரிவாக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்திய அரசாங்கத்தின் நிதி மற்றும் ஆலோசனை, பயிற்சி உதவிகளுடன், கடந்த ஆண்டு அவசர நோயாளர் காவு வண்டிச் சேவை, சிறிலங்காவின் தென் மற்றும் மேல் மாகாணங்களில் ஆரம்பிக்கப்பட்டது.

இரண்டாவது கட்டமாக இந்தச் சேவை நாடு முழுவதற்கும் விரிவாக்கப்படவுள்ளது என்று பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த சேவையை விரிவாக்குவதற்கு 300 நோயாளர் காவு வண்டிகளும், 2000 பணியாளர்களும் தேவைப்படுவதாகவும், அ6வர் கூறினார்.

முதல் ஆண்டில் இந்தச் சேவைக்கு  322,000 அழைப்புகள் வந்தன என்றும், 32 ஆயிரத்துக்கும் அதிகமான அவசர உதவி தேவைப்படும் நோயாளர்களுக்கான உதவிகள் அளிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது, தென் மற்றும் மேல் மாகாணங்களில் இந்தியா வழங்கிய 88 நோயாளர் காவு வண்டிகளில், 550 பணியாளர்கள், 24 மணிநேரமும் இந்தச் சேவையை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.