தமிழகத்தில் விஜய் தொலைகாட்சியில் பிக்பாஸ் என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றது.
இருந்தபோதிலும் அந்த சர்ச்சைகள் அவர்களாகவே உருவாக்குவது தான். அப்போது தான் அதை பற்றிய பேச்சுக்கள் அதிகமாகும்.
அந்த நிகழ்ச்சியை விளம்பரம் செய்வதை விட, சர்ச்சைகளை கிளப்பி விடும் பொழுது தான் மேலும், மேலும் மக்களை சென்று அடையும்.
இதுதான் காலம், காலமாக அரசியலிலும், திரையிலும் நடக்கும் நவீன உத்தி. பைசா செலவில்லாமல் பல பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் விளம்பரம் கிடைத்து விடும்.
மக்களின் கவனம் அதன் மீது சென்று விடும். பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகமாகும் பொழுது, விளம்பரத்தின் மூலம் கிடைக்கும் வருவாயும் அதிகரிக்கும்.
பல தொலைகாட்சிகள் இதனை விட பல நல்ல நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன. ஆனால் மக்கள் மனது சுவாரஸ்ய போதைக்கு உச்ச கட்டத்தில் அடிமையாகி இருக்கிறது.
வாழ்வின் ஒரு அங்கம் தான் பொழுது போக்கு என்பது மாறி, வாழ்வே பொழுது போக்கிற்கு தான் என்ற மன நிலைக்கு மாற்றி விட்டது.
தற்போது மக்கள் தொலைக்காட்சியில் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக உழவு நிகழ்ச்சி தொடங்கப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இது சம்பந்தமான புகைப்படங்களும் முகநூலில் கிடைகின்றது. இதிலும் 100 நாட்கள் 14 பிரபலங்கள் 5 கேமராக்கள் என்ற பாணி தான் கடைபிடிக்கப்படுகிறது.
ஆனால் செயல்முறை தான் வேறு. உண்பது, உறங்குவது, அடுத்தவரை உசுப்பி பார்ப்பது இது போன்ற ஸ்கிரிப்ட் நிகழ்ச்சியாக இல்லாமல் நேரடியாக வயலில் இறங்கி நாற்று நடுவதில் தொடங்கி, கதிர் அறுவடை வரை செய்ய வேண்டும்.
இதுதான் போட்டியின் விதிமுறை. இந்த நிகழ்ச்சி முழு வடிவம் பெற சாத்தியமாகி, திரைக்கு வரும் பட்சத்தில், மக்களிடம் எந்த அளவிற்கு ஆதரவு இருக்கிறதோ, அதை பொறுத்தே இன்றைய தமிழக மக்களின் மன நிலையை அறிந்து கொள்ளலாம்.
மக்கள் தொலைக்காட்சி, மக்கள் தொலைத்தொடர்புக் குழுமத்தின் கீழ் இயங்கும் ஒரு தமிழ் தொலைக்காட்சி நிறுவனமாகும்.
பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவில் இயங்கும் இத்தொலைக்காட்சி மருத்துவர் இராமதாஸ் அவர்களால் தொடங்கப்பட்டது.
இன உணர்வும், சமுதாய உணர்வும் கொண்ட நிகழ்ச்சிகளைத் தமிழ் மக்களுக்கு வழங்குவதை இந்நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
வெறும் பொழுது போக்கு என்பதையும் தாண்டி “மண் பயனுற வேண்டும்” என்னும் நோக்கத்தை இத்தொலைக் காட்சி முன்வைத்துள்ளது.
சமுதாயத்துக்குத் தீங்கானவை என இந்நிறுவனம் கருதும் விளம்பரங்களை ஏற்றுக்கொள்ளாமை, இந்திய வணிகத் திரைத்துறை சார்ந்த நிகழ்ச்சிகளில் தங்கியிராமை,
நெடுந்தொடர் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாமைஎன்பவற்றின் மூலம் இத்தொலைக்காட்சி பிற தொலைக்காட்சிச் சேவைகளிலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொண்டுள்ளது.