யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதகர் சரத் ஹேமசந்திரவின் குடும்பத்திற்கு உதவிகளை வழங்க நீதிபதி மா. இளஞ்செழியனின் நண்பர்கள் முன்வந்துள்ளனர்.
நீதிபதி இளஞ்செழியனின் நண்பர்கள் இணைந்து சரத் ஹேமசந்திரவின் குடும்பத்திற்கு புதிய வீடு ஒன்றை நிர்மாணித்து கொடுக்க முன்வந்துள்ளனர்.
அத்துடன் அவர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளையும் வழங்க நீதிபதி இளஞ்செழியனின் நண்பர்கள் முன்வந்துள்ளனர்.
நீதிபதி இளஞ்செழியன் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லுாரியில் கல்வி கற்ற நிலையில் அவரது பாடசாலை நண்பர்கள் மற்றும் வெளிநாட்டிலுள்ள தனவந்தர்களின் உதவியுடன் இந்த உதவிகள் வழங்கப்படவுள்ளன.
யாழ்ப்பாணம் நல்லுார் பின் வீதியில் வைத்து கடந்த 22 ஆம் திகதி மாலை நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது பொலிஸ் சார்ஜன் சரத் ஹேமசந்திர உயிரிழந்ததுடன் பொலிஸ் உத்தியோகஸ்தர் விமலசிறி காயமடைந்தார்.
துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்த சரத் ஹேமசந்திரவின் பிள்ளைகளை நீதிபதி இளஞ்செழியன் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதுடன் அவர்களுக்கு புதிய வீடு ஒன்றையும் நிர்மாணித்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.