யாழ்ப்பாணப் படையினருக்கு இராணுவத் தளபதியின் உத்தரவு!

army

யாழ்ப்பாணத்தின் பாதுகாப்புக் குறித்து இராணுவத் தலைமையகத்தின் உரிய அறிவுறுத்தல் இல்லாமல் இராணுவம் எதிலும் தலையிடவேண்டாம் என்று இராணுவத் தளபதி யாழ்ப்பாணப் படையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான செய்தி ஒன்றை தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்காவின் புதிய இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றதன் பின்னர் இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்க நேற்றைய தினம் யாழ்பாணத்துக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைவரம் குறித்து பலாலி இராணுவத் தலைமையகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது இராணுவத்தின் மூத்த அதிகாரிகளிடையே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

தற்போது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் அசாதாரண நிலைமைகள் குறித்து ஸ்ரீலங்கா இராணுவம் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்றும் சட்டம் ஒழுங்கு போன்ற விடயங்களில் அநாவசியமான முறையில் தலையிடவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்ட அவர், எந்த நடவடிக்கையாயினும் இராணுவத் தலைமையகத்தின் அலோசனைப்படியே மேற்கொள்ள வேண்டும் என்ற உத்தரவினையும் பிறப்பித்துள்ளார்.

மகேஸ் சேனநாயக்க கடந்த ஓராண்டு காலம் யாழ்ப்பாணக் குடா நாட்டின் தளபதியாகக் கடமையாற்றியதோடு அண்மையில் இராணுவத் தளபதியாக பதவி உயர்வு பெற்றார் என்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்க அம்சமாகும்.