தென்பகுதியில் குழப்பத்தை ஏற்படுத்தவே யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. வன்முறைகள் முன்னரைவிடத் தற்போது ஒரு படி அதிகரித்துள்ளன.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் இருந்ததைவிட ஒரு படி அதிகரித்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை பட்டப்பகலில் பொலிஸார் இருவர்மீது வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடுகள், உயிரிழப்புகள் என்பன வன்முறைகள் அதிகரித்த தன்மையைக் காட்டுகின்றன.
தென்பகுதியில் குழப்பத்தை ஏற்படுத்தவே யாழ்ப்பாணத்தில் இவ்வாறு வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அவசரப்பட்ட கருத்து வெளிப்பாடுகள் இதனுடன் தொடர்புபடுகின்றன. யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் அதிகரித்துள்ளன என்று மஹிந்த கூறுகின்றார். யாழ்ப்பாணத்து வன்முறைகள் தொடர்பில் அவர் தீவிரமான போக்கைக் கொண்டுள்ளார் என்பது அவரது கருத்துகளின் ஊடாகப் புலப்படுகின்றது” – என்றார்.