கொக்குவிலில் நேற்றுமுன்தினம் பட்டப்பகலில் பொலிஸார் இருவரைத் துரத்தித் துரத்தி வெட்டியவர்களுக்குத் தலைமை தாங்கியவர் விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி என்று தெரிவித்தார் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர. அந்தச் சந்தேகநபர் ஆவா குழுவின் உறுப்பினரும்கூட என்றும் அவர் கூறினார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பொறுமை இழந்திருக்கும் பொலிஸார் சுற்றுக்காவல், தேடல், சோதனை நடவடிக்கைகளை இராணுவத்துடன் இணைந்து நடத்தப் போகின்றனர் என்றும் அவர் அறிவித்தார். பொலிஸார் மீதான தாக்குதலை அடுத்து நிலமைகளை அவதானிப்பதற்காகப் பொலிஸ் மா அதிபர் நேற்று யாழ்ப்பாணம் வந்தார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை யில் சிகிச்சை பெற்றுவரும் காயமடைந்த பொலிஸார் இருவரையும் நேரில் சென்று பார்த்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது-:கோப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு கொன்ஸ்டபிள்கள், ஒருவர் சிங்களவர் மற்றவர் தமிழர் தமது மோட்டார் சைக்கிளில் ஒருவர் சீருடையிலும் ஒருவர் சிவில் உடையிலுமாகக் கொக்குவிலுக்குச் சென்றனர். தம்மைச் சில மோட்டார் சைக்கிள்கள் வேகமாகப் பின்தொடர்ந்து வருவதை இந்தப் பொலிஸார் கண்டனர்.
வழமைக்கு மாறானது அது. எனினும் தப்பிச் செல்ல முடியாது என்பதை அவர்கள் உணர்ந்தனர். தொடர்ந்தும் முன்னோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். துரத்தி வந்தவர்களின் மோட்டார் சைக் கிள்கள் சக்தி வாய்ந்தவை. ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் இருந்தனர். ஒருவர் ஓடினார். ஏனைய இருவர் அமர்ந்திருந்தனர். இவ்வாறு இரு மோட்டார் சைக்கிள்கள். அவர்களின் கைகளில் வாள்கள் இருந்தன.
பொலிஸாரின் மோட்டார் சைக்கிளைக் கடந்து சென்று தமது மோட்டார் சைக்கிளைக் குறுக்கே நிறுத்தி அவர்களை மறித்து பலவந்தமாக அவர்களை இழுத்து எதுவுமே சொல்லாமல் இரு பொலிஸாருக்கும் அவர்கள் தங்களை ஏன் இடைமறிக்கிறார்கள் என்று எதுவுமே தெரியவில்லை. அவர்களுக்கு எல்லாமும் சூனியமாக இருந்தனர். வந்தவர்கள் உடனே வெட்ட ஆரம்பித்து விட்டார்கள்.
அவர்களின் தாக்குதலால் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பொலிஸார் நிலைகுலைந்து கீழே வீழ்ந்தார். அவருடைய வலது கையின் மேல் பக்கத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதுபோன்று முழங்காலிலும் அதற்குக் கீழும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டது. சில வெட்டுக் காயங்கள் அவர்களின் எலும்பு வரை சென்றுள்ளன.
பின்னால் இருந்து வந்தவர் நிலமையைக் கொஞ்சம் சமாளித்துக்கொண்டு அந்த இடத்திலிருந்து தப்பியோட முயன்றார். ஆனால் அவரையும் துரத்திச் சென்ற அவர்கள் வெட்டினார்கள். அதனால் அவருக்கும் கையில் காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அவசர அறுவைச் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் நிலை கொஞ்சம் கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது. எனினும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகள் திருப்திகரமாக உள்ளன.
தாக்குதலின்போது இரு மோட்டார் சைக்கிள்கள் மட்டும் அங்கிருக்கவில்லை. பொலிஸாரின் கூற்றுப்படி அங்கு 6 அல்லது 7 மோட்டார் சைக்கிள்கள் இருந்தன. அனைத்திலும் இரண்டு அல்லது மூவர் இருந்தனர். கிட்டத்தட்ட 15 பேர் வரையிலானோர் இருந்தனர். எல்லோருமே இளைஞர்கள். எனவே பொலிஸாரால் தப்பிக்க முடியவில்லை. அவர்கள் பெருங் குரலில் அவலமாகக் கத்தியதை அடுத்து தாக்குதலாளிகள் அங்கிருந்து வந்தவழியே திரும்பி ஓடிவிட்டனர்.
நாம் தாக்குதலின் நிலை தொடர்பில் அறிந்துகொண்டிருக்கின்றோம். இந்த தாக்குதல் அணியின் தலைவர் விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் அத்தோடு ஆவா குழுவின் உறுப்பினரும்கூட என்று அடையாளப்படுத்தியிருக்கின்றோம்.
மற்றைய 6 பேரையும்கூட அடையாளப்படுத்தியிருக்கின்றோம். பொலிஸ் ரோந்து சோதனை சந்தேகப்படுபவர்களைக் கைது செய்வது சிறப்பு அதிரடிப் படையினரின் உதவி என்பவற்றுடன் சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
தாக்குதல் நடந்த பகுதியை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்குத் தேவை ஏற்படின் தரைப்படை கடற்படை வான்படை என்பவற்றின் உதவியையும் பெற்றுக்கொள்வோம்.
மக்கள் இலகுவாகவும் சுதந்திரமாகவும் நடமாடுவதற்கான வாய்ப்பைக் கொடுத்திருந்தோம். நிறையச் சந்தர்ப்பங்களையும் கொடுத்திருந்தோம். பாதுகாப்பைப் பலப்படுத்தியிருக்கவில்லை. பொதுமக்களுக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தக்கூடாது என்று நினைத்தோம்.
அப்படியான அணுகுமுறையால்தான் இது நடந்தது. இந்த மாதிரியான போக்கு பொதுமக்களுக்குச் சாதமானதாக இருக்காது. நான் நினைக்கின்றேன் பொதுமக்கள், அரச பணியாளர்கள் அச்சமடைந்திருக்கிறார்கள். பொலிஸாரும்கூடப் பொறுமை இழந்திருக்கிறார்கள்.
நாங்கள் சில நடவடிக்கைகளை எடுக்கவேண்டியிருக்கிறது. ஏனெனில் சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து அனுமதிக்க முடியாது. மக்கள் அமைதியோடும் இணக்கத்தோடும் வாழத்தக்க வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கு இருக்கிறது. அதற்காக நாம் வெவ்வேறான அணுகுமுறைகளை, உத்திகளைக் கையாளப்போகின்றோம். அதனை இங்கிருந்து நானே ஆரம்பிக்கப் போகின்றேன்.
இங்கிருக்கும் பொலிஸ் அதிகாரிகள் ஏனைய பொலிஸாருக்கு எப்படித் தலைமைத்துவத்தை வழங்கவேண்டும், எப்படிக் கையாளவேண்டும் என்ன செய்யவேண்டும் என்பது பற்றியெல்லாம் இன்று நான் அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கவுள்ளே்ன். ஆயுதப் படைகள் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினரிடம் இருந்து எந்த வகையிலான உதவிகள் தேவைப்படும் என்பது பற்றியும் ஆராயவுள்ளேன்.
வரும் நாள்களில் கூட்டுச் சுற்றுக் காவல், கூட்டுத் தேடல் சோதனைகளை ஆரம்பிக்கப்போகின்றோம். பொதுமக்களின் ஆதரவும் உதவியும் இதற்குத் தேவை. தகவல் தருபவர்கள் யார் என்கிற விவரங்களை எக்காரணத்தைக் கொண்டும் வெளியே சொல்லமாட்டோம்.
எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையை நீங்கள் கண்டாலும் உடனடியாகப் பொலிஸாருக்கு அறிவியுங்கள். அது மணல் கடத்தலாக இருக்கலாம், ஆள் கடத்தலாக இருக்கலாம், வழிப்பறி கொள்ளையாக இருக்கலாம் எதுவானாலம் அறிவியுங்கள்.
என்னுடைய தொலைபேசி இலக்கத்தைக்கூடத் தருகின்றேன். இப்படியான தகவல்கள் இருந்தால் உடனடியாக அறிவியுங்கள். 0717582222 என்ற இலக்கத்திற்கு அறிவியுங்கள். 0718592020 என்ற இலக்கத்திற்கும் அறிவிக்கலாம்.
எங்களுடைய பொறுமைக்கும் எல்லையிருக்கிறது. எங்களுடைய சார்ஜன்ட் ஒருவர் அண்மையில் உயிரிழந்திருக்கிறார். மேல் நீதிமன்ற நீதிபதியின் நம்பிக்கைக்குரிய பாதுகாவலராக இருந்த அவர் கொல்லப்பட்டார். அது தேவையற்ற ஒரு சம்பவம்.
தம்மைக் கட்டுப்படுத்த முடியாத குடிகாரர்கள் இதுபோன்றவற்றை உருவாக்கி விடுகிறார்கள். சில மாதங்களுக்கு முன்னர் மற்றொரு சம்பவமும் இடம்பெற்றது. இவையெல்லாம் நிறுத்தப்படவேண்டும். சட்டமும் ஒழுங்கும் காக்கப்படவேண்டும். எந்த விலை கொடுத்தும் சட்டமும் ஒழுங்கும் பாதுகாக்கப்படும். எல்லோருக்கும் ஒரே சட்டம்தான். எந்த இனமானாலும் மதமானாலும் கட்சியானாலும் எல்லோருக்கும் ஒரே சட்டம்தான். எனவே மக்கள் ஒத்துழைக்கவேண்டும்.