தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளான புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய கட்சிகளின் வவுனியா மாவட்ட பிரதிநிதிகளின் இன்று மாலை இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
அண்மைக்காலமாக தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக செயற்பட்டு வரும் நிலையில் ஆயுதப் போராட்டத்தின் வழிவந்த ஏனைய கட்சிகள் ஒன்றிணைந்து பேசியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா இந்திரன்ஸ் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற குறித்த ஒன்றுகூடல் தொடர்பில் அதில் கலந்து கொண்ட பிரதிநிதி ஒருவரிடம் எமது ஊடகவியலாளர் வினவிய போது,
தாங்கள் ஒன்றுகூடி பேசியது உண்மை எனவும், அந்த ஒன்றுகூடலில் சமகால அரசியல் நிலைமைகள் குறித்து ஆராய்ந்ததாகவும், மாவட்ட ரீதியில் மூன்று கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட முடிவெடுத்துள்ளதாகவும், எதிர்காலத்தில் மாதாந்தம் இப்படியான ஒன்றுகூடல்கள் தொடருமெனவும் குறிப்பிட்டதுடன் கலந்து கொண்டவர்களின் பெயர்களை குறிப்பிட மறுத்து விட்டார்.
மாற்றுத் தலைமை,. கூட்டுத்தலைமை போன்ற கருத்தியல்கள் உருவாகியுள்ள நிலையிலும் புளொட்டுக்கு வழங்கப்படுமென எதிர்பார்க்கப்பட்ட வடக்கு மாகாண சபையின் சுழற்சி முறை ஆசனம் தமிழரசுக் கட்சியின் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள சூழலில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதுடன், இந்த ஒன்றுகூடல் தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படாமை பல ஊகங்களை ஏற்படுத்தியுள்ளது.