• தொலைதொடர்பு கோபுரங்கள் ஊடாக குற்றசெயல் நடந்த இடத்தில் நின்றவர்களை கண்டறிந்தோம் – புங்குடு தீவு மாணவி கொலைவழக்கில் சாட்சியம்!
தொலைதொடர்பு கோபுரங்கள் ஊடாக கையடக்க தொலைபேசிகளுக்கு உள்வந்த அழைப்புக்கள் மற்றும் வெளி சென்ற அழைப்புக்கள் தொடர்பில் ஆராய்ந்து குற்றசெயல் நடந்த நேரத்தில், நடந்த சூழலில் இருந்தவர்கள் தொடர்பில் அறிந்து கொண்டேன் என குற்றபுலனாய்வு திணைக்கள பொலிஸ் பரிசோதகர் ஏ.கே.நிஷாந்த சில்வா சாட்சியமளித்துளார்.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணை இன்றைய தினம் புதன்கிழமை யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய விளக்கம் ( ரயலட் பார் ) முறைமையில் நடைபெற்றது.
அதன் போது , புங்குடுதீவு மாணவி கொலைவழக்கின் பிரதான விசாரணை அதிகாரியான குற்றபுலனாய்வு திணைக்கள பொலிஸ் பரிசோதகர் ஏ.கே.நிஷாந்த சில்வா சாட்சியம் அளித்தார்.
குறித்த பொலிஸ் பரிசோதகர் கடந்த 24ஆம் திகதி மன்றில் சாட்சி அளித்தார். அதன் போது நேரம் போதாமையினால், பிராதன விசாரணை இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிரகாரம் சாட்சியாளர் இன்றைய தினம் தனது மிகுதி சாட்சியத்தை பிரதான விசாரணையின் போது சாட்சியமளித்தார்.
ஆறாம் எதிரியின் வீட்டில் இருந்து மூக்கு கண்ணாடியை மீட்டேன்.
அதில் , குறித்த வழக்கின் ஆறாம் எதிரியான சிவதேவன் துஷந்த் குற்றபுலனாய்வு திணைகளத்தில் அளித்த வாக்கு மூலத்தில் , எனது வீட்டின் பின் பக்க கூரையில் , கொங்கிரீட் வீம் மீது , சொப்பின் பை ஒன்றினுள் மூக்கு கண்ணாடியை வைத்து சொப்பின் பையால் சுற்றப்பட்டு அதன் மேல் காற்சாட்டையால் சுற்றி வைக்கப்பட்டு உள்ளது.
அதனை என்னால் காட்ட முடியும் என வாக்கு மூலம் அளித்து , அதில் தனது கையொப்பத்தையும் ஆறாவது சந்தேக நபர் வைத்தார்.
அவரது வாக்கு மூலத்தின் அடிப்படையில் அவரது வீட்டுக்கு சென்று அவர் கூறிய இடத்தில் இருந்து மூக்கு கண்ணாடியினை மீட்டோம்.
கணணி மென்பொருள் அறிவுள்ளவரை சிறையில் சந்தித்தேன்.
வவுனியா சிறைச்சாலையில் , சந்தேக நபர்களுடைய வாக்கு மூலத்தினை பதிவு செய்யும் நோக்குடன் 2015ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் , 27ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் சென்று இருந்தோம்.
அதன் போது அங்கு பிரிதொரு வழக்கின் சந்தேக சந்தேக நபரான முஹம்மட் இப்ராஹீம் என்பவரை எதேச்சையாக சந்தித்தேன். அவர் பணமோசடி தொடர்பான வழக்கின் சந்தேக நபராவார். அவருக்கு கணணி அறிவு உண்டு என்பது எனக்கு ஏற்கனவே தெரியும்.
எவ்வாறு எனில் அவருடைய வழக்கினை நான் தான் விசாரணை செய்திருந்தேன். அந்நிலையில் ஒருநாள் அவரிடம் விசாரணைக்கு சென்று இருந்த போது , எனது கையடக்க தொலைபேசியும் , என்னுடன் வந்திருந்த சார்ஜென்ட் தர உத்தியோகஸ்தரின் கையடக்க தொலைபேசியும் மேசை மீது இருந்தது.
அப்போது சந்தேக நபரான முஹம்மட் இப்ராஹீம் தனது மடிக்கணணி மூலம் எனது கையடக்க தொலைபேசியில் இருந்து சார்ஜென்ட் தர உத்தியோகஸ்தரின் கையடக்க தொலைபேசிக்கு குறுந்தகவல் அனுப்பினார். அது எவ்வாறு என அவரிடம் வினாவிய போது அதற்கு தான் ஒரு மென்பொருளை பாவிப்பதாக கூறினார்.
இந்த சம்பவத்தின் பின்னர் அவருக்கு கணணி மற்றும் மென்பொருள் தொடர்பிலான அறிவு உண்டு என்பதனை அறிந்து கொண்டேன். அதன் அடிப்படையில் வவுனியா சிறைச்சாலையில் நான் அவரை கண்ட போது , கையடக்க தொலைபேசியில் எடுத்த காணொளிகளை (வீடியோக்களை ) அழித்தால் மீள எடுக்க முடியுமா என வினாவினேன். அதற்கு அவர் ஆம் என கூறினார்.
2 கோடி இலஞ்சம் தருவதாக கூறினார்கள்.
பின்னர் முஹம்மட் இப்ராஹீம்க்கு புதுக்கடை நீதிமன்ற வழக்கு தவணைக்கு வந்த போது குற்றபுலனாய்வு திணைக்கள உத்தியோகஸ்தர் ஒருவரிடம் என்னை சந்திக்க வேண்டும் என தகவல் அனுப்பி இருந்தார். அதனை அறிந்து நான் அவரை சந்தித்தேன்.
அதன் போது , நான் அன்றைய தினம் வவுனியாவில் தன்னை சந்தித்து கதைத்து விட்டு சென்ற பின்னர் இந்த வழக்கின் ஒன்பதாவது எதிரியான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவர் தன்னுடன் கதைத்ததாகவும், அப்போது தாம் படுகொலை செய்யப்பட்ட மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்ததை காணொளி (வீடியோ)யாக கையடக்க தொலைபேசியில் எடுத்தார்கள் என்றும் , அதனை தற்போது அழித்து விட்டோம்.
அதனை மீள எடுக்க முடியுமா ? என கேட்டார்கள் எனவும் , தற்போது தானும் தன்னுடைய தம்பியான மகாலிங்கம் சசிதரனும் அரச சாட்சியாக மாற விரும்புவதாகவும் , அதற்காக எனக்கு 2 கோடி ரூபாய் பணம் கொடுக்க தயார் எனவும் தன்னிடம் சுவிஸ் குமார் கூறியதாக முஹம்மட் இப்ராஹீம் என்னிடம் தெரிவித்தார்.
அதனை அடுத்து இது தொடர்பில் முஹம்மட் இப்ராஹீமிடம் வாக்கு மூலம் பெற ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் அனுமதி பெற்று 24.08.2016ஆம் திகதி கொழும்பு சிறைச்சாலையில் வைத்து முஹம்மட் இப்ராஹீமிடம் வாக்கு மூலம் பெற்றோம்.
கையடக்க தொலைபேசிகள் தொடர்பில் விசாரணை.
குற்ற செயல் நடந்த இடம் மக்கள் நடமாட்டம் இல்லாத இடமாக இருந்தாலும் , எதேச்சையான மக்கள் நடமாட்டம் இருக்கும் என்பதனை எனது தனிப்பட்ட உளவாளிகள் மூலம் அறிந்து கொண்டேன். அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டேன்.
அதன் போது கையடக்க தொலைபேசிகள் தொடர்பிலான விசாரணைகளையும் மேற்கொண்டேன். சந்தேகநபர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கையடக்க தொலைபேசிகள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொண்டேன்.
அத்துடன் குற்ற சம்பவம் நடைபெற்ற கால பகுதியான 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி காலை முதல் 14ஆம் திகதி மதியம் வரையிலான கால பகுதியில் குற்ற சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்கள் கூடாக கையடக்க தொலைபேசிகளுக்கு உள்வந்த அழைப்புக்கள் மற்றும் வெளிசென்ற அழைப்புக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டேன்.
அந்த பகுதியில் காணப்பட்ட நான்கு தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு சொந்தமான நான்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் தகவல்களை பெற்றுக்கொண்டேன். அதன் அடிப்படையில் 10 பேர் தொடர்பில் செய்ய தீர்மானித்தோம்.
அதன் பிரகாரம் அவர்களை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் விசாரணைக்கு வருமாறு அழைத்தோம்.
குற்ற செயலுடன் தொடர்புடைய ஒருவரை கண்டறிந்தோம்.
அதில் மாப்பிள்ளை என அழைக்கப்படும் நடராஜா புவனேஸ்வரன் என்பவர் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தோம்.
அதன் போது அவருக்கு இந்த வழக்கின் 5ஆம் எதிரியான தில்லைநாதன் சந்திஹாசன் மற்றும் 6ஆம் எதிரியான சிவதேவன் துஷாந்த் ஆகிய இருவரின் கையடக்க தொலைபேசியில் இருந்து மாப்பிள்ளை என்பவருக்கு குற்ற சம்பவம் நடைபெறுவதற்கு முதல் நாளான 12ஆம் திகதி மற்றும் குற்ற சம்பவம் நடைபெற்ற தினமான 13ஆம் திகதி அழைப்புக்கள் சென்றுள்ளன.
அது தொடர்பில் மாப்பிள்ளையிடம் கேட்ட போது , தான் கள்ளு விற்பனை செய்வதனால் தன்னிடம் , கள்ளு வேண்டும் என கோரி அவர்கள் அழைப்பு எடுத்து இருந்தனர் என கூறினார்.
குற்ற சம்பவம் நடைபெறுவதற்கு முதல்நாள் 12ஆம் திகதி மதியம் 12.25 மணிக்கும் இரவு 21.56 மணிக்கும் இடையில் சந்திரஹாசன் மற்றும் துஷாந்த் ஆகிய இருவரது தொலைபேசியில் இருந்து அழைப்புக்கள் சென்றுள்ளன.
குற்ற சம்பவம் நடைபெற்ற 13ஆம் திகதி மாலை 15.50 மணிக்கு பிறகு மாப்பிள்ளையின் தொலைபேசிக்கு எந்த அழைப்புக்களும் வரவில்லை. இது தொடர்பில் அவரிடம் விசாரணை செய்த போது , அன்றைய தினம் (13ஆம் திகதி) தனது தொலைபேசியை நிறுத்த சொல்லி சந்திரஹாசன் கூறியதனால் தான் அதனை நிறுத்தி வைத்ததாக கூறினார்.
அதில் இருந்து இந்த குற்ற சம்பவத்திற்கும் மாப்பிள்ளை என்று அழைக்கப்படும் நடராஜா புவனேஸ்வரனுக்கும் தொடர்பு இருக்கின்றது என்பதனை அறிந்து கொண்டோம்.
அதன் பின்னர் தான் நீதவான் முன்னிலையில் வாக்கு மூலம் அளிக்க விரும்புவதாக நடராஜா புவனேஸ்வரன் தெரிவித்தார்.
அத்துடன் இந்த வழக்கின் இரண்டாம் எதிரியான பூபாலசிங்கம் ஜெயக்குமார், மூன்றாம் எதிரியான பூபாலசிங்கம் தவக்குமார் ஐந்தாம் எதிரியான தில்லைநாதன் சந்திரஹாசன் ஆறாம் எதிரியான சிவதேவன் துஷாந்த் மற்றும் உதயசூரியன் சுரேஷ்கரன் ஆகியோர் குற்றசம்பவ்வம் இடம்பெற்ற தினத்தன்று மாணவி பாடசாலை செல்லும் பாதையில் காலை 7 மணியளவில் சின்ன ஆலடி எனும் இடத்தில் நின்று இருந்தார்கள் அவர்கள் எதோ காதல் விடயம் பேச போவதாகவே நான் எண்ணி இருந்தேன்.
ஆனால் திடீரென அவ்வாறு செயற்ப்பட்டார்கள் என என்னிடம் விசாரணையின் போது மாப்பிள்ளை கூறினார்.
அதனால் அவர் அந்த இடத்திற்கு எதிர்பாராத விதமாக சென்று இருந்தார் என்பதனை அறிந்து கொண்டேன். அதனால் அவரை கைது செய்யவில்லை. அவர் கேட்டதற்கு இணங்க ஊர்காவற்துறை நீதவான் முன்னிலையில் அவர் வாக்கு மூலம் அளிக்க நீதவானிடம் அனுமதி பெற்று ஏற்பாடு செய்தேன்.
குற்றசெயலுடன் தொடர்புடைய இன்னொருவரையும் கண்டறிந்தோம்.
அதேவேளை மாப்பிள்ளையிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இந்த குற்ற சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு நபராக உதயசூரியன் சுரேஷ்கரன் என்பவர் உள்ளார் எனும் தகவலை அறிந்தேன். அதன் பிரகாரம் சுரேஷ்கரனை அரியாலையில் வைத்து கைது செய்தேன்.
கைது செய்யப்பட்ட சுரேஷ்கரனிடம் மேற்கொண்ட விசாரணையின் பிரகாரமே மாணவியின் சடலம் மீட்கப்பட்ட இடத்தில் மாணவி வன்புணர்வுக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் , சடலம் மீட்கப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றினுள் வைத்தே மாணவி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார் என அறிந்து கொண்டோம்.
அதன் பிரகாரம் மாணவி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக சுரேஷ்கரன் கூறிய இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டோம். அதன் போது எம்மால் மேலதிக தடய பொருட்கள் சான்றுகளை பெற முடியவில்லை.
இருவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
அதேவேளை இந்த வழக்குடன் தொடர்புடையவர் எனும் குற்ற சாட்டில் ஊர்காவற்துறை பொலிசாரால் பத்தாவது சந்தேக நபராக ஜெயவர்த்தன ராஜ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். அதேவேளை குற்ற புலனாய்வு திணைக்களத்தால் உதயசூரியன் சுரேஷ்கரன் 11ஆவது சந்தேக நபராகவும் தர்மலிங்கம் ரவீந்திரன் 12ஆவது சந்தேக நபராகவும் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்வதனை காணொளியாக (வீடியோவாக) பதிவு செய்திருந்தனர் என்பதனை அறிந்து கொண்டு ஆறாவது சந்தேக நபரான சிவதேவன் துஷாந்த் என்பவரின் மடிக்கணணி , மற்றும் ரப் ஆகியவற்றை கைப்பற்றினோம்.
அவற்றை ஆய்வுக்காக ஊர்காவற்துறை நீதவானின் உத்தரவுக்கு அமைய மொரட்டுவ பல்கலைகழகத்திற்கும் சேர்ட் எனும் நிறுவனத்திற்கும் அனுப்பி வைத்தோம். அதன் அறிக்கைகள் எமக்கு கிடைக்க பெறவில்லை.
குற்றசம்பவம் இடம்பெற்ற நேரத்தில் நான்கு சந்தேகநபர்கள் கொழும்பில்
அதேவேளை எமது விசாரணைகளின் போது , குற்ற சம்பவம் இடம்பெற்ற கால பகுதியில் குற்ற சம்பவம் இடம்பெற்ற இடத்தில் 4ஆம் எதிரியான மகாலிங்கம் சசிதரன் , 7ஆம் எதிரியான பழனி ரூபசிங்கம் குகநாதன் , 8ஆம் எதிரியான ஜெயதரன் கோகிலன் , மற்றும் 9ஆம் எதிரியான சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோர் கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் உள்ள தனியார் தங்குமிடத்தில் தங்கி இருந்தார்கள் என அறிந்து கொண்டேன். அது தொடர்பில் அவர்கள் தங்கி இருந்த தங்குமிட உரிமையாளரிடம் விசாரணைகளை மேற்கொண்டேன்.
ஒன்றரை வருடங்கள் விசாரணை செய்தோம்.
இந்த வழக்கு தொடர்பில் குற்றபுலனாய்வு திணைக்களம் ஒன்றரை வருடங்கள் விசாரணைகளை முன்னெடுத்து இருந்தது. விசாரணைகள் முடிவடைந்ததும் விசாரணை கோவைகள் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பாரப்படுத்தப்பட்டன.
அதன் பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தால் இந்த வழக்கின் 10ஆவது சந்தேக நபரான ஜெயவர்த்தன ராஜ்குமார் மற்றும் 12ஆம் எதிரியான தர்மலிங்கம் ரவீந்திரன் ஆகியோர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதேவேளை 11ஆவது சந்தேக நபரான உதயசூரியன் சுரேஷ்கரன் அரச தரப்பு சாட்சியாக மாற்றப்பட்டார். என பிரதான விசாரணையின் போது 35ஆவது சாட்சியமான குற்றப்புலனாய்வு திணைக்கள பொலிஸ் பரிசோதகர் ஏ.கே.நிஷாந்த சில்வா சாட்சியமளித்தார்.
அதனை தொடர்ந்து எதிரிகள் தரப்பு சட்டத்தரணியான மஹிந்த ஜெயவர்த்தன குறுக்கு விசாரணைகளை மேற்கொண்டார். அதன் போது ,
கேள்வி :- இந்த வழக்கில் எதிரிகள் சிலர் குற்றசெயல் நடக்கும் போது குற்றசம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்திருக்க வில்லை என சாட்சியம் அளித்தீர் அவர்கள் யார் ? அவர்கள் அந்த நேரம் எங்கு இருந்தார்கள் ?
பதில் :- ஆம். 4ஆம் எதிரியான மகாலிங்கம் சசிதரன் , 7ஆம் எதிரியான பழனி ரூபசிங்கம் குகநாதன் , 8ஆம் எதிரியான ஜெயதரன் கோகிலன் , மற்றும் 9ஆம் எதிரியான சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோர் கொழும்பில் நின்றார்கள் அது தொடர்பில் கண்காணிப்பு ஒளிப்பதிவு கருவிகளின் ஒளிப்பதிவுகளை (CCTV கரமா காட்சிகளை) குற்றபுலனாய்வு திணைக்கள உப பொலிஸ் பரிசோதகர் சம்பத் பார்வையிட்டு இருந்தார். அவர் அதனை உறுதிபடுத்தி உள்ளார்.
கேள்வி :- குற்ற சம்பவம் இடம்பெற்ற கால பகுதியில் 4 ஆம் எதிரி கசீனோ க்ளப்பில் நின்றாரா ?
பதில் :- ஆம். அதனையும் குற்றபுலனாய்வு திணைக்கள உப பொலிஸ் பரிசோதகர் சம்பத் கண்காணிப்பு ஒளிப்பதிவு கருவிகளின் ஒளிப்பதிவுகளை (CCTV கரமா காட்சிகளை) பார்த்து உறுதிப்படுத்தி உள்ளார்.
கேள்வி :- எதிரிகள் குற்ற செயல் நடந்த கால பகுதிக்கு அண்மைய கால பகுதியில் கொழும்பு – யாழ்ப்பாணம் விமானத்தில் பயணம் செய்தார்களா என விசாரணை செய்தீர்களா ?
பதில் :- இல்லை.
கேள்வி :- ஆறாவது எதிரியிடம் 8 தரம் வாக்கு மூலம் பெற்று உள்ளீர்கள் என்றால் சரியா ?
பதில் :- ஆம்.
கேள்வி :- அவரிடம் எட்டாவது தரம் பெற்ற வாக்கு மூலத்தில் தான் மூக்கு கண்ணாடி பற்றி கூறியுள்ளார் என கூறினால் சரியா ?
பதில் :- ஆம்.
நான் எட்டாம் எதிரி சார்பில் கூறுகிறேன். எட்டாவது தரம் வாக்கு மூலம் பெரும் போது , அச்சுறுத்தி , பலாத்தகாரம் பண்ணியே வாக்கு மூலம் பெற்று உள்ளீர் என கூறுகிறேன் என சட்டத்தரணி கூறினார்.
அதற்கு சாட்சி , நான் ஆறாம் எதிரியை அச்சுறுத்தியோ , தூண்டியோ , வாக்குஉறுதி கொடுத்தோ வாக்கு மூலம் பெறவில்லை. என தெரிவித்தார்.
கேள்வி :- இலங்கேஸ்வரன் என்பவரிடம் பெற்ற வாக்கு மூலத்தில் குற்ற சம்பவம் இடம்பெறுவதற்கு முதல் நாள் 12ஆம் திகதி வாகனத்தில் இந்த 9 எதிரிகளுடனும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 2 நபர்கள் இருந்தார்கள் என கூறி இருந்தார் என்பது சரியா ?
பதில் :- ஆம்.
கேள்வி :– அவர்கள் யார் ?
பதில் :- எங்கள் விசாரணைகள் மூலம் அதனை அறிந்து கொள்ள முடியவில்லை.
கேள்வி :- மாப்பிள்ளை என அழைக்கப்படும் நடராஜா புவனேஸ்வரன் என்பவரை ஏன் கைது செய்யவில்லை ?
பதில் :- அவர் இந்த குற்ற சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு எதேச்சையாக தான் சென்று இருந்தார் என்பதனை விசாரணை ஊடாக அறிந்து கொண்டேன். அதனால் கைது செய்யவில்லை.
இந்த குற்ற சம்பவம் தொடர்பில் தொடர்புடைய நபர் ஒருவரை கைது செய்யாமல் விடும் அதிகாரம் உமக்கு இல்லை. நீர் ஏற்கனவே தயார் செய்த வாக்கு மூலத்தை நீதிமன்றில் கூறுமாறு அவரிடம் கூறி அவரை கைது செய்யாமல் விட்டீர் என நான் எதிரிகள் தரப்பில் கூறுகிறேன் என சட்டத்தரணி கூறினார். அதனை சாட்சி தான் முற்றாக மறுக்கிறேன் என கூறினார்.
கேள்வி :- சுரேஷ்கரன் முதல் தடவை விசாரணை செய்யும் போது வாக்கு மூலம் தந்தரா ?
பதில் :- இல்லை.
கேள்வி :- எப்போது தந்தார் ?
பதில் :- இரண்டாம் தரம் விசாரணை செய்யும் போது.
சுரேஷ்கரனை இரண்டாம் தரம் விசாரணை செய்யும் போது இந்த வழக்கில் இருந்து விடுவிக்கிறேன் என அவருக்கு வாக்குறுதி வழங்கி , நீர் தயாரித்த வாக்கு மூலத்தை கூற வைத்துள்ளீர் என எதிரிகள் தரப்பில் கூறுகிறேன் என சட்டத்தரணி கூறினார். அதனை சாட்சி முற்றாக மறுக்கிறேன் என்றார்.
கேள்வி : சுரேஷ்கரனை அரச தரப்பு சாட்சியாக நீரா மாற்று நீர் ?
பதில் :- இல்லை. அதற்கான அதிகாரம் என்னிடம் இல்லை
கேள்வி :- சந்தேக நபர்களிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் கூற முடியுமா ?
பதில் :- ஆம் . சந்தேக நபர்களிடம் பெற்ற வாக்கு மூலத்தின் அடிப்படையில், 5ஆம் சந்தேக நபரான தில்லைநாதன் சந்திரஹாசன் என்பவரின் சகோதரி மற்றும் தாய் ஆகியோர் வசிக்கும் வவுனியாவில் உள்ள வீட்டில் இருந்து, கறுப்பு நிற ஐ போன் ஒன்றும் , ஆறாம் சந்தேக நபரான சிவதேவன் துஷாந்த் வீட்டில் இருந்து நோக்கியா போன் ஒன்று, சாம்சங் ரப் ஒன்று மடிக்கணணி ஒன்றும் கொழும்பு மோதரையில் வைத்து 9 ஆவது சந்தேக நபரான மகாலிங்கம் சசிக்குமார் என்பவரின் மனைவியிடம் இருந்து சில கையடக்க தொலைபேசிகளை கைப்பற்றி இருந்தோம்.
கேள்வி :- அவற்றை என்ன செய்தீர்கள் ?
பதில் :- ஊர்காவற்துறை நீதவானிடம் பாரப்படுத்தி , அவரின் உத்தரவுக்கு அமைய மொரட்டுவ பல்கலைகழகத்திற்கும் , சேர்ட் எனும் நிறுவனத்திடம் ஆய்வுக்கு அனுப்பி வைத்தோம். என சாட்சியம் அளித்தார்.