ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதற்காக மாலிக்கு அனுப்புவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள சிறிலங்கா படையினர் மற்றும் அவர்களின் ஆயுதங்கள் மற்றும் கருவிகளை மதிப்பீடு செய்வதற்கும், ஆய்வு செய்வதற்கும், ஐ.நா குழுவொன்று சிறிலங்கா வந்துள்ளது.
நியூயோர்க் மற்றும் மாலி ஆகிய இடங்களில் இருந்து வந்துள்ள ஐ.நா அதிகாரிகளைக் கொண்ட இந்தக் குழுவுக்கு லெப்.கேணல் காலோஸ் வாஸ் தலைமை தாங்குகிறார்.
இந்தக் குழுவில், லெப்.கேணல் டொங்லின் டுவான்மு, மேஜர் காலோஸ் ரொக்செட், பிரென்டா அமெரால், ஜோர்ஜ் சோரெஸ், பீற்றர் டொனால்ட்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் நேற்றுமுன்தினம் மாலை சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
இதன் போது, ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்கா இராணுவம் ஆற்றியுள்ள பங்களிப்புகள் மற்றும் தற்போது ஐ.நா அமைதிப்படைக்கு படையினரை தெரிவு செய்வதில் கடைப்பிடிக்கப்படும் ஆய்வு முறை உள்ளிட்டவை தொடர்பாக சிறிலங்கா இராணுவத் தளபதி விளக்கமளித்துள்ளார்.